டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இம்முறை முதல் முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் எஸ்.எல் 3 பிரிவு பாரா பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவிற்கு டோக்கியோ பாராலிம்பிக்கில் நான்காவது தங்கப்பதக்கத்தை பிரமோத் பகத் பெற்று தந்துள்ளார். 


 


இந்நிலையில் யார் இந்த பிரமோத் பகத்? எப்படி பாரா பேட்மிணடனில் நுழைந்தார்?


1988ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் அட்டபிரா பகுதியில் பிறந்தவர் பிரமோத் பகத். இவருக்கு 5 வயதாக இருந்தப் போது போலியோ நோய் இவரை தாக்கியுள்ளது. இதனால் இவருடைய ஒரு கால் சரியாக இல்லாமல் பாதிக்கப்பட்டது. இந்த நோய் பாதிப்பு அவரை முடக்கி போடவில்லை. எப்போதும் சாதாரண மனிதர்களை போல் ஆர்வமாக இருந்தார். விளையாட்டில் தீவிர ஆர்வத்துடன் இருந்தார். தன்னுடைய 13 வயதில் முதல் முறையாக பேட்மிண்டன் ஆடுகளத்தில் போட்டிகளை பார்க்க சென்று பகத் அந்த விளையாட்டு மீது காதல் கொண்டார். அதில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பயிற்சியை தொடங்கினார். 


 


2002ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் உடல்நிலை நன்றாக இருந்த வீரர்கள் பலரை இவர் தோற்கடித்துள்ளார். இதைப் பார்த்த பயிற்சியாளர் இவரை பாராபேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தீவிர பயிற்சியில் பிரமோத் பகத் ஈடுபட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் முறையாக பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். எனினும் ஒற்றையர் பிரிவில்  இவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. 




அதன்பின்னர் முதல் முறையாக 2015ஆம் ஆண்டு பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்றார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இந்தப் பதக்கங்களை வென்று இருந்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்றார். 


2019ஆம் ஆண்டு இவருக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஏனென்றால் அந்த ஆண்டில் உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் நடைபெற்ற ஐடபிள்யூஎஸ் உலக பாரா பேட்மிண்டன் போட்டியிலும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இவ்வாறு சர்வதேச பாரா பேட்மிண்டனில் கிட்டதட்ட 50 பட்டங்களுக்கு மேல் இவர் வென்றுள்ளார். எனினும் இவருடைய ஒரே கனவு பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். இத்தனை நாட்கள் பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் சேர்க்கப்படவில்லை. 




டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பேட்மிண்டன் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கருதினார். அதன்படி டோக்கியோ பாராலிம்பிக் எஸ்.எல்3 பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதில் 2019ஆம் ஆண்டு பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் சந்தித்த பெத்தேலை சந்தித்தார். 2019ஆம் ஆண்டை போல் இந்தப் போட்டியிலும் அவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகப்படுத்த பாரா பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்று பிரமோத் பகத் சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் பேட்மிண்டனில் கூட இதுவரை இந்தியா தங்கப்பதக்கம் வென்றது இல்லை. ஆனால் பாராலிம்பிக் பேட்மிண்டனில் அறிமுக ஆண்டிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளது. 


மேலும் படிக்க: இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம்....! பாரா பேட்மிண்டனில் உலக சாம்பியன் பிரமோத் பகத் அசத்தல் !