டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் காம்பவுண்ட் பிரிவு கலப்பு வில்வித்தை போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இந்தியா சார்பில் ராகேஷ் குமார் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் பங்கேற்றனர். காம்பவுண்ட் கலப்பு பிரிவு வில்வித்தை பொறுத்தவரை மொத்தம் 16 முறை ஒரு அணி வில்வித்தை செய்ய வேண்டும். அதில் அதிகமாக புள்ளிகள் எடுக்கும் அணி வெற்றி பெறும். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ராகேஷ் குமார் மற்றும் ஜோதி தாய்லாந்து நாட்டின் பார்பரோன் மற்றும் அனோன் இணையை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இந்திய அணி 147-141 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 


இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் இந்திய அணி துருக்கி அணியின் ஓஸ்நூர் மற்றும் கொர்மாஸ் ஆகிய இருவரையும் எதிர்த்து விளையாடியது. இதில் முதல் நான்கு அம்புகளுக்கு பிறகு 37-34 என்ற கணக்கில் துருக்கி அணி முன்னிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு அம்புகளுக்கு பின் 75-73 என்ற கணக்கில் துருக்கி அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அடுத்த நான்கு அம்புகளில் இந்திய அணி மூன்று முறை 10 புள்ளிகளை எடுத்தது. எனினும் துருக்கி அணியும் சிறப்பாக வில்வித்தை செய்ததால் ஸ்கோர் 114-112 என இருந்தது. துருக்கி அணி தொடர்ந்து இரண்டு புள்ளிகள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருந்தது. 


 






விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியாளரை தீர்மானிக்க கடைசி 4 அம்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட துருக்கி அணி 153-151 என்ற கணக்கில் வென்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து ராகேஷ் குமார்-ஜோதி ஜோடி பாராலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியது. 


முன்னதாக இன்று காலை காம்பவுண்ட் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் ஜோதி பங்கேற்றார். இவர் அயர்லாந்து வீராங்கனை லூயிஸை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் தொடக்கத்தில் சற்று நன்றாக வில்வித்தை செய்த ஜோதி பின்னர் சற்று தடுமாறினார். இந்தப் போட்டியின் இறுதியில் 137 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அயர்லாந்து வீராங்கனை லூயிஸ் 141 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தையில்  ஜோதி வெளியேறினார்.


மேலும் படிக்க: தேசிய விளையாட்டு தினம்: மாயாஜால ஹாக்கி வித்தைகாரரின் 116-வது பிறந்தநாள் இன்று !