டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் பங்கேற்றார். இந்தப் பிரிவில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவினா பட்டேல் உலக தரவரிசையில் தன்னைவிட முன்னிலையில் உள்ள 4 வீராங்கனைகளை தோற்கடித்தார். அத்துடன் காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியன் மற்றும் அரையிறுதியில் உலக தரவரிசையில் 3ஆம் நிலை வீராங்கனையான மியாவை தோற்கடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பாராலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸில்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை பவினா பட்டேல்தான்.


 இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாரா டேபிள் டென்னிஸ் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஷியோவை  பவினா பட்டேல் எதிர்கொண்டார். ஷியோவ் இடம் ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக் குரூப் போட்டியில் பவினா பட்டேல் தோல்வி அடைந்து இருந்தார். இதனால் அந்த தோல்விக்கு இறுதிப் போட்டியில் பழிவாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியின் முதல் கேமில் இரு வீராங்கனைகளும் நன்றாக தொடங்கினர். சீன வீராங்கனை ஷியோ யிங் 11-7 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். 


இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் ஷியோ யிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த கேமை 11-5 என்ற கணக்கில் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இதனால் மூன்றாவது கேமை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பவினா பட்டேல் தள்ளப்பட்டார். மூன்றாவது கேமின் தொடக்கத்தில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இறுதியில் மூன்றாவது போட்டியை 11-6 என்ற கணக்கில் ஷியோ யிங் வென்றார். அத்துடன் ஷியோ யிங் 11-7,11-5,11-6 என்ற கணக்கில் போட்டியை வென்றார்.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம்  பவினா பட்டேல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்


பவினா வெள்ளி வென்றதை அடுத்து பிரதமர் குடியரசுத் தலைவர் உட்பட பலர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


பவினா வரலாறு படைத்துள்ளதாக வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி,






பவினாவின் ஆற்றல் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளதாகத் தனது ட்வீட்டில் வாழ்த்தியுள்ளார் குடியரசுத் தலைவர்






தேசிய விளையாட்டு தினத்தை இந்தியா பாராலிம்பிக்ஸ் வெள்ளிப்பதக்கத்துடன் தொடங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 






கவனம், கடும் உழைப்பு மற்றும் வலிமையின் மிகச் சிறந்த வெளிப்பாடாக பவினா விளையாடியது இருந்ததாக கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். 






சினிமா நட்சத்திரங்கள் சிலரும் பவினாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.