டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், ‘ஏ’ தகுதி நிர்ணய நேரத்தின் படி தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தவர் சஜன் பிரகாஷ். 


இன்று, ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஜன் பிரகாஷ், 1:57.22 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து, 8 பேர் பங்கேற்ற போட்டியில் நான்காவதாக நிறைவு செய்தார். ஆனால், மொத்தம் 38 பேர் கலந்து கொண்ட இந்த பிரிவு போட்டியில், சஜன் 24-வது இடத்தில் நிறைவு செய்தார்.






இந்த பிரிவில், டாப் 16 இடங்களில் வருபவர்கள் அரை இறுதிக்கு போட்டிக்கு முன்னேறுவர். அதனால், சஜன் பிரகாஷ் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். எனினும், அவரது முயற்சி பாராட்டக்குரியது என சமூக வலைதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.


சஜன், ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். அவரின் தாய் சாந்திமால் (Shantymol) ஒரு விளையாட்டு வீரர்.  அதனால், சிறு வயது முதலே தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சஜன், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கினார்.






2015இல் கேரளத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கட்டற்ற பாணி, வண்ணாத்திப் பாணி, தொடர்நீச்சற் போட்டிகளில் பங்கேற்றார். பிப்ரவரி 8, 2015இல் 6 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்து அந்தப் போட்டிகளின் சிறந்த மெய்வல்லுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஒலிம்பிக்கில் இவர் இந்தியா சார்பாக 200மீ வண்ணாத்திப் பாணி நீச்சற்போட்டியில் பங்கேற்றார். இதன் காரணமாக, இந்திய இரயில்வேயில் பணி புரியும் வாய்ப்பும் கிடைத்தது.


மேலும், பரதநாட்டியத்திலும் ஆர்வம் கொண்ட சஜன் பிரகாஷ், தற்போது  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திறந்த பல்கலைக்கழகத் திட்டத்தில் கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்று முதுகலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.  அடுத்த ஒலிம்பிக்கில் சாதிக்க வாழ்த்துகள் சஜன்!