Mirabai Chanu Appointed AddlSP: கூடுதல் எஸ்.பி., ஆனார் ‛வெள்ளி மங்கை’ மீராபாய் சானு: மணிப்பூர் முதலமைச்சர் அறிவிப்பு!

மீராபாய் சானுவிற்கு மணிப்பூர் மாநில காவல்துறையில், கூடுதல் எஸ்.பி பதவி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். 

Continues below advertisement

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற ‛க்ளின் அண்டு ஜெர்க்’ பிரிவில்  115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

Continues below advertisement

ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பாக வரலாறு படைத்த மீராபாய் சானுவிற்கு மணிப்பூர் மாநில காவல்துறையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 1 கோடு ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கபட உள்ளதாக பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இதே போல, ஒலிம்பிக் ஜூடோ விளையாட்டில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற லிக்மாபம் சுஷிலா தேவிக்கு காவல்துறை அலுவலர் பணியில் இருந்து காவல்துறை துணை ஆய்வாளராக பதிவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிம்பிக்கில் பங்கேற்ற மணிப்பூரைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 1994-ஆம் ஆண்டு பிறந்தவர் மீராபாய் சானு. இவர் தன்னுடைய சிறு வயதில் அதிகமாக விறகு உள்ளிட்டவற்றை தன்னுடைய வீட்டு தேவைக்காக சுமந்து சென்றுள்ளார். அவர் அப்போது செய்த இந்த வேலை பின்நாட்களில் அவருடைய பளுத்தூக்குதலுக்கு உதவியாக இருந்துள்ளது. தன்னுடைய 11 வயதில் முதல் முறையாக உள்ளூர் பளுதூக்குதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னர் தேசிய அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று முழு முனைப்புடன் இருந்தார். 

பளுத்தூக்குதல் போட்டியில் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீராங்கனை குஞ்சுராணி தேவியை தன்னுடைய ரோல் மாடலாக கொண்டு பயிற்சி செய்து வந்தார். தன்னுடைய பயிற்சியாளர் அனிதா சானு இடம் பயிற்சி பெறுவதற்காக தன்னுடைய கிராமத்தில் இருந்து தினமும் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்வார். 2011ஆம் ஆண்டு தேசிய ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின்னர் இவருக்கு இந்திய பளுதூக்குதல் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தேசிய பயிற்சியில் அவருடைய ரோல் மாடல் குஞ்சுராணி தேவியிடம் இருந்து பயிற்சியை பெற்றார்.

2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சானு தன்னுடைய ஸ்நாட்ச் பிரிவில் 82 கிலோ மட்டும் தூக்கினார். அதன்பின்னர் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் மூன்று முயற்சியிலும் தோல்வி அடைந்தார். இதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். தன்னுடைய கனவு தொடரில் அதிக தவறுகள் செய்தது அவருக்கு பெரும் வருத்தமாக அமைந்தது. 

ரியோ ஒலிம்பிக் தோல்வியை ஒரு தூண்டுகோளாக எடுத்து சானு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார். 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுத்தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். உலக பளு தூக்குதல் போட்டிகளில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை படைத்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். அந்த தங்கத்திற்கு பிறகு இவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் அந்த ஆண்டு முழுவதும் பளுதூக்குதலில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது. இந்த காயத்தில் மீண்டு வந்த சானு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அதில் 4ஆவது இடம் பிடித்தார். அந்தப் போட்டிகளில் நான்காவது இடம் பிடித்திருந்தாலும் முதல் முறையாக ஸ்நாட்ச் மற்றும் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் சேர்த்து 200 கிலோவிற்கு மேல் முதல் முறையாக தூக்கி அசத்தினார். 

இந்தாண்டு நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு  ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்தார். ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோ மட்டுமே தூக்கியதால் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த உலக சாதனையின் மூலம் அவருடைய சர்வதேச ரேங்கிங் முன்னேற்றும் கண்டது. இதன் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 

Continues below advertisement