டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய தடகள அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அந்த செய்தி வெளியே வந்தவுடன் கேரளாவில் உள்ள ஒரு மீனவ கிராமத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒருவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். யார் அவர்? மீனவ இளைஞன் அலெக்ஸுக்கு டோக்யோ பயணம் சாத்தியமானது எப்படி?


கால்பந்து டூ தடகளம்:


திருவனந்தபுரத்தின் அருகே  புல்லுவில்லா மீனவ கிராமம் உள்ளது. இங்கு ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர் அலெக்ஸ் ஆண்டனி. இவரும் இவருடைய தம்பி அணில் ஆண்டனியும் தன்னுடைய தந்தைக்கு அவ்வப்போது மீன் பிடிக்க உதவி வந்தனர். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கஞ்சிரம்குளத்திலுள்ள பிகேஎஸ் பள்ளியில் படித்துள்ளார். அந்தப் பள்ளி தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் போது இயல்பான மற்ற கேரள சிறுவர்களை போல் கால்பந்து ஆட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த சமயத்தில் இவரிடம் இயல்பாக இருந்த ஓட்ட திறமையை உடற்கல்வி ஆசிரியர் பிரதீப் குமார் பார்த்துள்ளார். அதன்பின்னர் அலெக்ஸை கால்பந்து விளையாட்டிற்கு பதிலாக தடகளத்தில் இறக்கியுள்ளார். தன்னுடைய ஆசிரியர் நினைத்து போல அலெக்ஸ் சிறப்பாக ஓடியுள்ளார். 




தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தினார். 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் போது இவருடைய குடும்ப வறுமை காரணமாக ஒருவேளை உணவு கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது இவருக்கு இவருடைய பள்ளியில் இருந்து உணவு அளிக்கப்பட்டது. அந்த உணவு ஒருவேளை கிடைக்காமல் இருந்தால் இவருடைய தடகள கனவு அத்துடன் நின்று இருக்கும். அவருடைய பயிற்சிக்கு தேவையான உணவு இல்லாமல் தடகளத்தை நிறுத்த வேண்டிய நிலை உருவாகி இருந்திருக்கும். 


ஏர் இந்தியா வேலை:


பல்கலைக்கழக போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அலெக்ஸ் அதிலும் பதக்கங்களில் வென்றார். இதன் விளைவாக அவருக்கு இந்திய விமானப்படையில் வேலை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு முதல் பாட்டியாலாவில் உள்ள தேசிய தடகள அகாடமியில் பயிற்சி செய்து வந்தார். அங்கு வந்தபிறகு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். 




2014ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தப் போது இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒராண்டிற்கு மேலாக தடகள பயிற்சி செய்ய முடியாமல் போனது. காயத்தில் இருந்து மீண்டு வந்த இவர் 2019-ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகளில் 4*400 மீட்டர் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். 


டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பு:


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக வைக்கப்பட்ட சோதனை ஓட்டத்தில் இவர் 400 மீட்டர் தூரத்தை 47.83 விநாடிகளில் இரண்டாவதாக வந்தார். இதன் காரணமாக இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான கலப்பு 4*400 மீட்டர் ரிலே பிரிவில் இடம்பிடித்தார். ஆண்டனியின் கனவு பலிக்க வேண்டும். வறுமையை வென்ற அவரின் முயற்சிக்காகவும், அவரைப் போல இன்னும் பல இளைஞர்களின் கனவைத் தூண்டுவதற்காகவும் ஆண்டனி வெல்ல வேண்டும்.


மேலும் படிக்க: மெஸ்ஸியும் சர்வதேச கோப்பையும் : நிறைவேறிய நீண்ட நாள் கனவு !