டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி இன்று தனது முதல் போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி உலக தரவரிசையில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி முதல் கால்பதியின் தொடக்கத்திலேயே முதல் கோலை அடித்தது.  இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை  பெற்றது. 


இதனைத் தொடர்ந்து சுதாரித்து கொண்டு விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ராணி ராம்பால் சிறப்பாக ஒரு ஃபில்டு கோல் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி முதல் கால்பாதியிலேயே கோல் அடித்து 1-1 என சம நிலைக்கு வந்தது. அதன்பின்னர் இரண்டாவது கால்பாதியில் இரு அணியின் வீராங்கனைகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தனர். 




அதன்பின்னர் மூன்றாவது கால்பாதியின் தொடக்கத்தில் நெதர்லாந்து அணி அதிகமாக பந்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொடர்ச்சியாக மூன்றாவது கால்பாதியில் 3 கோல்களை அடித்து நெதர்லாந்து அணி அசத்தியது. இதன்மூலம் மூன்றாவது கால்பாதியின் முடிவில் 4-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றது. நான்காவது பாதியில் இந்திய அணியின் ஆட்டம் சற்று சுமாராக அமைந்தது. இந்திய வீராங்கனைகள் அதிகளவில் தவறுகள் செய்ய தொடங்கினர். இதை சரியாக பயன்படுத்திய நெதர்லாந்து அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 5ஆவது கோலை அடித்தது. 


 






இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணிக்கு எதிராக ஒரளவு நன்றாக விளையாடி இருந்தாலும் சிறிய தவறுகள் அதிகமாக செய்தது. இதன் காரணமாக இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. அடுத்த இந்திய மகளிர் அணி வரும் 26ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 5.45 மணிக்கு தொடங்குகிறது. 


முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்திய ஆடவர் அணி நாளை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வரலாறு படைத்த இந்தியா!