டேபிள் டென்னிஸ் போட்டிகள் இன்று நடைபெற்றது. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் தொடக்க முதலே சீன தைபே ஜோடி அதிரடி காட்டியது. அவர்கள் தொடர்ந்து 4 செட்களையும் கைபற்றி அசத்தினர். இந்திய ஜோடி சற்று போராடினாலும் அவர்களால் ஒரு செட்டை கூட வெல்ல முடியவில்லை. இதனால் 11-8, 11-6, 11-5, 11-4 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபே ஜோடி வெற்றிப் பெற்றது. இதனால் முதல் சுற்றிலேயே இந்திய இணையான சரத் கமல்-மானிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
முதல் நாளான இன்று, அடுத்து நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி பங்கேற்றார். சர்வதேச தரவரிசை பட்டியலில் 98வது இடத்தில் இருக்கும் சுகிர்தா முகர்ஜி, 78-வது இடத்தில் இருக்கும் லிண்டா பெர்க்ஸ்டார்மை எதிர்கொண்டார். இந்த போட்டியின் ஆரம்பத்தில், சுகிர்தா சொதப்பினாலும், பின் சுதாரித்து கொண்டு கம்-பேக் கொடுத்தார். இந்த போட்டியில், 5-11, 11-9, 11-13, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் லிண்டாவை தோற்கடித்த அடுத்த சுற்றுக்கு சுகிர்தா முன்னேறினார். அடுத்த சுற்றில், 55-வது தரவரிசையில் இருக்கும் போர்சுகல் வீராங்கனை ஃபு யூவை எதிர்கொள்கிறார்.
முன்னதாக, மற்றொரு போட்டியில், இந்தியாவின் மானிகா பத்ரா இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரிட்டனின் டின் டின் ஹோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 1992-ம் ஆண்டுக்கு பிறகு, கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடர் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
முதல் நாளான இன்று, பளுதூக்குதல் போட்டியில், 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சீனாவின் ஹோ சிஹாய் தங்கப்பதக்கத்தை வென்றார்.