டோக்கியோ ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி. இன்று அவருடைய சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. அதில் முதல் சுற்றில் இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.  இதன்மூலம் இந்தியா சார்பில் முதல் முறையாக ஒரு வீராங்கனையாக  ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் பங்கேற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 


 


 






அத்துடன் தன்னுடைய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று புதிய வரலாற்றையும் படைத்துள்ளார். அடுத்து இரண்டாவது சுற்று போட்டியில் ஃபிரான்சு நாட்டின் ப்ரூனட் மானன் என்ற வீராங்கனையை இன்று காலை 7.10 மணிக்கு சந்திக்க உள்ளார். உலகின் மூன்றாம் நிலையான வீராங்கனையான ஃபிரான்சு நாட்டின் ப்ரூனட் மானன் உலக கோப்பை வென்ற ஃபிரான்சு அணியில் இடம்பிடித்தவர்.  இதனால் இரண்டாவது சுற்று போட்டி பவானி தேவிக்கு சற்று சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 






ஏற்கெனவே இந்தியா சார்பில் முதல் முறையாக ஃபென்சிங் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றும் வரலாறு படைத்துள்ளார். இந்தச் சாதனைகளுடன் இரண்டாவது சுற்றில் அவர் களமிறங்க உள்ளார். இரண்டாவது சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையை வீழ்த்தி சாதனை வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


 


மேலும் படிக்க: கையில் ஒலிம்பிக் டாட்டூ... இத்தாலியில் தீவிரப் பயிற்சி : நாளை களம்காணும் பவானிதேவி...!