டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் விளையாட்டிற்கு இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ், ஶ்ரீஹரி நட்ராஜ் மற்றும் மானா பட்டேல் ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இவர்களில் ஶ்ரீஹரி நட்ராஜ் மற்றும் மானா பட்டேல் இன்று தங்களுடைய பிரிவு நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்றனர். இதில் முதலில் மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவில் மானா பட்டேல் பங்கேற்றார். இவர் தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 100 மீட்டர் தூரத்தை 1.05.20 என்ற நேரத்தில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். மொத்தமாக நடைபெற்ற ஹீட்ஸ் பிரிவில் இருந்து முதல் 16 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
அதன்படி மொத்தம் போட்டியிட்ட 41 வீராங்கனைகளில் நேரத்தில் மானா பட்டேலின் நேரம் 39ஆவது இடத்தை பிடித்தது. இதனால் அவர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவருடைய சிறப்பான நேரமான 1.03.77 என்ற நேரத்தில் பந்தைய தூரத்தை கடந்து இருந்தாலும் அவர் 37 ஆவது இடத்தையே பிடித்திருப்பார். ஆகவே முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள அவருக்கு இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. அடுத்த முறை தன்னுடைய நேரத்தை குறைத்து கொண்டு சிறப்பாக நீந்தி முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவில் இந்தியாவின் ஶ்ரீஹரி நட்ராஜ் பந்தைய தூரத்தை 54.31 விநாடிகளில் கடந்து தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 5ஆவது இடத்தை பிடித்தார். மொத்தம் 40 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பிரிவில் முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அதன்படி ஶ்ரீஹரியின் நேரம் அவருக்கு 27ஆவது இடத்தை பிடித்து தந்தது. அவருடைய சிறப்பான நேரமான 53.77 விநாடிகளில் பந்தைய தூரத்தை நீந்தி கடந்து இருந்தால் அரையிறுதி வாய்ப்பு எளிதாக அவருக்கு கிடைத்திருக்கும். எனினும் அதை அவர் செய்ய தவறிவிட்டார். இதன்விளைவாக அவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளார்.
இந்தச் சூழலில் மீதம் உள்ள ஒரே இந்திய வீரரான சஜன் பிரகாஷ் நாளை தன்னுடைய பிரிவில் களமிறங்க உள்ளார். அவராது அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி குரூப் போட்டி: இந்தியா தோல்வி !