டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் நேற்று விகாஸ் கிருஷ்ணன் ஜப்பான் நாட்டு வீரரிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 


இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் தனது முதல் சுற்றில் களமிறங்கினார். 51 கிலோ எடைப்பிரிவில் இவர் டொமினிக்கன் குடியரசு நாட்டின் ஹெர்னாண்ட்ஸ் கார்சியாவை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார். 38 வயதான இந்திய நட்சத்திரம் மேரி கோம் தன்னைவிட 15 வயது குறைவான வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் வெற்றிப் பெற்று அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. 


 






38 வயதாகும் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக இவர் தகுதி பெற்றார். அதில் 51 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம் அரையிறுதில் நிகோலா அடெம்ஸ் இடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2012ஆம் ஆண்டு தங்கம் வெல்ல தவறிய இவர் 2016ஆம் ஆண்டு ரியோவில் வெல்ல வேண்டும் என்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இவரால் தகுதி பெற முடியவில்லை.


 






இந்தச் சூழலில் தற்போது இரண்டாவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்டு அவருடைய 6 உலக சாம்பியன் பட்டத்துடன் ஒலிம்பிக் சாம்பியன் என்ற பட்டத்தையும் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் மணிஷ் கௌசிக் விளையாட உள்ளார். இந்திய நேரப்படி இந்தப் போட்டி மாலை 3.15 மணிக்கு தொடங்க உள்ளது. 


மேலும் படிக்க: ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் மனிகா பட்ரா வெற்றி..!