டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிகளில் குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் உலக தரவரிசையில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தக் குரூப் பிரிவு போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் அடித்தது. முதல் கால் பாதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. 


அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்தை பல முறை எளிதாக கடந்து சென்றனர். அதன்விளைவாக தொடர்ச்சியாக 3 கோல்களை அடித்து இந்திய வீரர்களை அதிர்ச்சி அடைய செய்தனர். அதன்பின்னர் அந்த கால்பாதி முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இறுதியில் முதல் பாதி நிறைவடையும் போது ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வலுவான நிலையில் முன்னிலை பெற்றது. 




இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கால்பாதியில் இந்திய அணியின் வீரர்கள் தொடக்க முதல் ஆஸ்திரேலிய அணியின் எல்லைக்குள் கோல் அடிக்கும் முனைப்பில் செயல்பட்டனர். அதன்விளைவாக தில்பிரீத் சிங் சிறப்பாக ஒரு ஃபில்ட் கோல் அடித்தார். இந்திய அணி 1-4 என்ற கணக்கில் முன்னிலையை குறைத்தது. அதன்பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் கிடைத்த பெனால்டி ஸ்டோர்க் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒரு கோலும் அடித்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. மூன்றாவது கால்பாதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6-1 என முன்னிலை வகித்தது. 


கடைசி மற்றும் நான்காவது கால்பாதியில் ஆஸ்திரேலிய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் ஜப்பான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. 


 






முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் குரூப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தச் சூழலில்  நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு நடைபெறும் அடுத்த குரூப் போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. குரூப் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: வெற்றியுடன் டோக்கியோ ஒலிம்பிக்கைத் தொடங்கினார் மேரி கோம்..!