Yuzvendra Chahal Hat Trick: ஐபிஎல் தொடரின் 18 ஆண்டுகால வரலாற்றில் சென்னைக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஆவர்.
சம்பவம் செய்த சாஹல்:
நடப்பு தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வந்த சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டது. சாம் கரண் மற்றும் ப்ராவிஸ் ஆகியோரின் பேட்டிங்கால், சென்னை அணி குறைந்தபட்சம் 210 ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 19வது ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் சாஹல், ஹாட்ரிக் உட்பட ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியை நிலைகுலைய செய்தார். இதனால், 190 ரன்களுக்கு சுருண்ட சென்னை அணி, போட்டியில் தோல்விகண்டு நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையே இழந்துள்ளது.
ஹாட்ரிக் சம்பவம்:
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 179 ரன்களை குவித்து இருந்தது. சாஹல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்த தோனி, அடுத்த பந்திலேயே பவுண்டரி லைன் அருகே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹுடா அதே ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களை சேர்க்க, நான்காவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் அனுஷ் காம்போஜ் கிளீன் போல்டாக, ஆறாவது பந்தில் நூர் அகமது கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 19வது ஓவரில் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, சென்னை வசம் இருந்த போட்டியை பஞ்சாபிற்கானதாக சாஹல் மாற்றினார்.
சாதனை பட்டியலில் சாஹல்:
நேற்றைய போட்டி மூலம், ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை சாஹல் தன்வசப்படுத்தியுள்ளார். அதோடு, ஐபிஎல் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை சாஹல் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அமித் மிஸ்ரா (3 முறை), யுவராஜ் சிங் (2 முறை) என முன்னணியில் உள்ளனர். அதோடு, யுவராஜ் சிங், அக்சர் படேல் மற்றும் சாம் கரண் வரிசையில் பஞ்சாப் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நான்காவது வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
சாதனை பட்டியல்:
அமித் மிஸ்ரா
- 15/05/2008 - டெல்லி கேபிடல்ஸ் vs டெக்கான் சார்ஜர்ஸ்
- 21/05/2011 - டெக்கான் சார்ஜர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- 17/04/2013 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs புனே வாரியர்ஸ
யுவராஜ் சிங்
- 01/05/2009 - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- 17/05/2009 - பஞ்சாப் கிங்ஸ் vs டெக்கான் சார்ஜர்ஸ்
யுஸ்வேந்திர சாஹல்
- 18/04/2022 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 30/04/2025 -பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்