டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விளம்பரதாரராக சர்வதேச ஊட்டச்சத்து நிறுவனமான ஹெர்பாலைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர். 


முன்னதாக, ஜே.எஸ்.டபிள்யூ குழு, எம்.பி.எல் விளையாட்டு அமைப்பு, அமுல் ஆகிய நிறுவனங்கள் இந்திய ஒலிம்பிக் அமைப்பின் விளம்பரதாரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.






இதில், ஜே.எஸ்.டபிள்யூ குழு சார்பாக 1 கோடி ரூபாயும், எம்.பி.எல் விளையாட்டு அமைப்பு 8 கோடி ரூபாயும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான கிட் ஆகியவற்றையும் வழங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதே போல, அமுல் நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.


இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாடகி அனன்யா பிர்லா ஆகியோர் இணைந்து ‘ஹிந்துஸ்தானி வே’ என்ற பாடலை இயற்றியுள்ளனர்.







இதே போல, ஏற்கனவே இந்திய அணிக்கான அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் பாடல் கடந்த வாரம் வெளியானது. ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியைச் வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வர அனைவரும் உற்சாகம் அளித்து வருகின்றனர். 


முன்னதாக, ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் வீரர் வீராங்கனைகளை காணொளி காட்சி மூலம் சந்தித்த பிரதமர் மோடி, ”எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள், உங்களின் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்துங்கள்” என அறிவுரை வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் சரத் கமல், துப்பாகி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை மேர் கோம் உள்ளிட்டோர் பிரதமர் மோடியுடனான உரையாடலில் கலந்து கொண்டனர். ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இந்திய வீரர் வீராங்கனைகள் ஜூலை 17-ம் தேதி டோக்கியோ செல்ல இருக்கின்றனர்.