2020-ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலாக் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர்.


ஜூலை 17-ம் தேதி, ஒலிம்பிக் தேர்ச்சியாளர்கள் அனைவரும் டோக்கியோவுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  அந்த வரிசையில், நாம் தமிழ்ர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வாழ்த்துகளை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த வாழ்த்துகள்!" என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன். பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர். கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிமூன்று தம்பி. தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.


தங்களது சீரிய முயற்சியாலும், அளப்பெரும் திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி விளையாட்டுத்துறையில் சாதனைகள் பல புரிந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தம்பி, தங்கைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்து, தமிழ் மண்ணுக்குப் பேரும், புகழும் சேர்க்க வேண்டுமெனும் எனது விருப்பத்தையும். வெற்றிவாகை சூடி வர எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார். 


ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு நாடெங்கிலும் இருந்து அனைவரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் பாடகி அனன்யா பிர்லா ஆகியோர் இணைந்து ‘ஹிந்துஸ்தானி வே’ என்ற பாடலை இயற்றி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சீமான் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.