``இரண்டாம் இடம் பிடித்தவர்களை இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஒருபோதும் நான் இரண்டாம் இடத்தில் இருக்கப் போவதில்லை”என்றார் ஃபெர்ராரி நிறுவனர் என்சோ ஃபெர்ராரி. முதல் இடத்தை நோக்கி ஓடிய ஃபெர்ராரி நிறுவனம், இன்று உலகின் முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
விளையாட்டிலும் அப்படியே. முதல் இடம் பிடித்தவர்களைதான் இந்த உலகம் கொண்டாடும். முதல் இடம் இல்லை என்றாலும் ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான, சவாலான விளையாட்டு தொடர்களில் குறைந்தது பதக்கம் வென்று நாடு திரும்பினால் மட்டுமே மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள். ஆனால், இரண்டாம் மூன்றாம் இடத்தவர்களை கூட மறந்துவிடும் இச்சமூகத்தில், போராடி தோற்றவரை என்றுமே மறக்க முடியாது.
அந்த வரிசையில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளில் நான்காவது இடம் பிடித்தவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என சொல்லி அவர்களது உழைப்பையும் முயற்சியையும் உதாசினப்படுத்திட முடியாது. நான்காவது இடத்தில் நிறைவு செய்து தோல்வியைடைந்தவர்கள், உத்வேகத்தையும் வெற்றி வேட்கையையும் உலகிற்கு காட்டியவர்கள். அப்படி, இந்தியா மறக்க முடியாத அந்த சில சம்பவங்கள் இதோ!
மில்கா சிங்
’ஃப்ளையிங் சீக்’ என அனைவராலும் அறியப்பட்டவர் மில்கா சிங். இந்தியாவில் தடகளம் என்றவுடன் நினைவுக்கு வருபவர்களில் மில்கா சிங் முதல் இடத்தில் இருப்பார். 1960-ம் ஆண்டு நடைபெற்ற ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில், 400 மீ இறுதிப்போட்டியில் பங்கேற்றிருந்த அவர் 1/10 நொடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஆனால், அதனை தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் மில்கா பங்கேற்றிருந்தாலும், பதக்கம் கிடைக்கவில்லை.
பி.டி உஷா
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில், 400 மீட்டர் தடுப்பு ஓட்டத்தில் 1/100 நொடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் பி.டி உஷா. ஆனால், இன்று இந்தியாவில் இருந்து சர்வதேச தளத்திற்கு சென்று சாதித்தி கொண்டிருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் பி.டி உஷா.
தீபா கர்மகர்
52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் தீபா கர்மகர். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்த அவர், 0.150 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார்.
அபினவ் பிந்த்ரா
2008 ஒலிம்பிக் தொடர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார் அபினவ் பிந்த்ரா. அதனை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ரியோ ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற அவர், நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். அதுவே அவரது கடைசி ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஹாக்கி அணி
முதல் முறையாக 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அறிமுகம் செய்யப்பட்ட போது இந்திய அணி பங்கேற்றது. அதில் இந்திய அணி 4ஆவது இடத்தை பிடித்தது. அதன்பின்னர் 36ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இரண்டாவது முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அதில் அனைத்து போட்டிகளிலும் ஒரு டிரா மட்டும் செய்தது. மற்ற போட்டிகளில் தோல்வி அடைந்தது. அத்துடன் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்தச் சூழலில் மூன்றாவது முறையாக இந்திய மகளிர் அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, 49 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதி வரை முன்னேறி அசத்தியது.
ஆனால், அரை இறுதியில் தோல்வி அடைந்த மகளிர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியிலும் போராடி தோற்றது. ஆனால், இந்தியாவில் ஹாக்கி மீண்டும் எழுச்சி காண காரணமாகியுள்ளது.
அதிதி அசோக்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் கோல்ஃப் போட்டிகளின் கடைசி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதிதி அசோக் தொடக்கத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அதன்பின்னர் கடைசியில் 18 குழிகளின் முடிவில் நான்காவது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், இன்றைய போட்டி முடிவில் நான்காவது இடத்தில் நிறைவு செய்த அதிதி, பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இந்தியாவே கோல்ஃப் பார்க்க தொடங்கியுள்ளது, கோல்ஃப் விளையாட்டின் ஆட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டு போட்டியை பார்த்தே அதிதிக்கு கிடைத்த வெற்றி! அதுவே அவரது முதல் சாதனையும் கூட!