இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.


முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வென்ற இந்திய அணி, மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணி, ஆறுதல் வெற்றியை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள இலங்கை அணிக்கு, ஒரு வழியாக இன்று வெற்றி கிடைத்துள்ளது.


அவிஷ்கா ஃபெர்ணாண்டோ (76), பனுகா ராஜபக்ஸே (65) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இலங்கை அணி இலக்கை எட்டி போட்டியை வென்றது. இந்திய பெளலர்களைப் பொருத்தவரை, ராகுல் சஹார் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். 


இந்த போட்டியில், இந்திய அணியைச் சேர்ந்த ஐந்து இளம் வீரர்களாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, ராகுல் சஹர், சேத்தன் சகாரியா மற்றும் கிருஷ்ணப்பா கெளதம் ஆகிய ஐந்து வீரர்கள் ஒரே நேரத்தில் அறிமுகமாகியுள்ளனர். இதில், முதல் இன்னிங்ஸில் ஆடிய சஞ்சு சாம்சன் 40+ ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில், ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும், சேத்தன் சகாரியா 2 விக்கெட்டுகளையும், கி. கெளதம் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.






முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா நிலைத்து ஆட, ஷிகர் தவன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒன் டவுன் களமிறங்கிய சஞ்சு சாம்சன், நிதானமாக ரன் சேர்த்தார்.


ஆனால், 49 ரன்கள் எடுத்திருந்தபோது ப்ரித்வி ஷாவும், 46 ரன்கள் எடுத்திருந்தபோது சஞ்சு சாம்சனும் அவுட்டாகினர். அதனை தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் போட்டி தொடங்கியது. அப்போது ஓவ்வொரு அணிக்கு தலா 3 ஓவர்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 47 ஓவர்கள் இந்திய அணி விளையாடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழைக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியபோது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால், 200 ரன்களை எட்டுமா என்ற நிலை இருந்தது.


சூர்யகுமார் யாதவ் மட்டும் நிதானமாக களத்தில் நின்று ரன் சேர்த்தார். சூர்யகுமாரும் 40 ரன்கள் எடுத்திருந்தபோது தனஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களை தனஜெயா சொற்ப்ப ரன்களுக்கு அவுட்டாக்கினார். இலங்கை அணியைப் பொருத்தவரை, தனஜெயா மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் அறிமுக வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர். இதனால், 43.1 ஓவர்களின் போதே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 225 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.