டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் விளையாட்டில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் பி.வி சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் அவர், அரை இறுதி போட்டியில் இன்று விளையாடினார். இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டி இது.
அரை இறுதிப்போட்டியில் சீன தைபேவைச் சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீராங்கனையான தாய் சு-யிங்கை எதிர்கொண்டார். இதுவரை, ஒலிம்பிக் பதக்கம் வெல்லாத தாய் சு-யிங் இந்த முறை அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பதக்கத்தை வெல்லும் முனைப்பில் விளையாடினார். சில்வர் சிந்து கோல்டு சிந்துவாக இந்தியா திரும்ப, இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும். எனவே, இரு வீராங்கனைகளும், வெற்றி வேட்கையோடு மோதினர்.
21 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டில், இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்று ஆட்டத்தில் முன்னேறினர். இறுதியில், 21-18 என்ற புள்ளிக்கணக்கில் தாய் சு-யிங் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டில், 21-12 என்ற புள்ளிக்கணக்கில் மீண்டும் தாய் சு-யிங் வென்றார். இரண்டாவது செட்டின்போது, லைனிற்கு வெளியே அடித்து 5 புள்ளிகளை அள்ளிக் கொடுத்தார். இதனால், தாய் சு-யிங்கிற்கு புள்ளிகள் கூடின. இதை தவிர்த்திருந்தால், இரண்டாவது செட்டை தனதாக்கிக் கொண்டிருக்கும் வாய்ப்பு சிந்துவிற்கு கிடைத்திருக்கும். இறுதியில், இரண்டு செட்களையும் இழந்து இந்த போட்டியில் சிந்து தோல்வியைடைந்தார். இப்போது, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், சீனாவின் ஹி பிங்கை எதிர்த்து விளையாட உள்ளார். இந்த போட்டி நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் சிந்துவும் - தாய் சு-யிங்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில் 13-5 என்ற கணக்கில் வெறும் 5 முறை மட்டுமே சிந்து வெற்றி கண்டுள்ளார். எனினும், ஒலிம்பிக் போன்ற முக்கியமான தொடர்களில், தாய் சு-யிங் சொதப்புவது வழக்கமாக இருந்துள்ளது. எனினும், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய தாய் சு-யிங் சிந்துவை தோற்கடித்துள்ளார்.
முன்னதாக, காலிறுதி போட்டியில், உலக பேட்மிண்டன் தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் பி.வி சிந்து, 5வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் ஆட்டத்தை, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில், 16-16 என சம நிலையில் இருந்தனர். சவாலாக இருந்த போட்டியில், 22-20 என சிந்து போட்டியை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.