டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு 10 மீட்டர் ஏர் ரைஃபிள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டிலும் பெரிய சோகமே கிடைத்தது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல தவறினார்கள். இதைத் தொடர்ந்து இந்தப் பிரிவில் நடைபெற்ற கலப்பு போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்ல தவறியது. இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் இன்று மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 ப்ரோன் துபாக்கிச்சுடுதல் நடைபெற்றது. இதில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் அஞ்சும் மோட்கில் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில் 3 முறையில் துப்பாக்கிச்சுடுதல் செய்ய வேண்டும். முதலில் நீலிங், ப்ரோனிங் மற்றும் ஸ்டான்டிங் ஆகிய மூன்று வகையில் வீராங்கனைகள் சுட வேண்டும். இந்த மூன்று வகையில் மொத்தமாக வீராங்கனைகள் எடுத்த புள்ளிகள் வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவார்கள்.
இதில் அஞ்சும் மோட்கில் நீலிங் பிரிவில் 99,98,96,97 என மொத்தமாக 390 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் பிரிவில் 98,100,98,99 என மொத்தமாக 395 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் அவர் 94,96,95,97 என மொத்தமாக 382 புள்ளிகள் பெற்றார். 3 பிரிவுகளிலும் சேர்த்து அவர் 1167 புள்ளிகள் பெற்று இடத்தை 15 ஆவது இடத்தை பிடித்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை தேஜேஸ்வினி சாவந்த் நீலிங் பிரிவில் 97,92,98,97 என மொத்தமாக 384 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் பிரிவில் 98,99,98,99 என மொத்தமாக 394 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் 94,93,95,94 என மொத்தமாக 376 புள்ளிகள் பெற்றார். 3 பிரிவுகளிலும் சேர்த்து அவர் 1154 புள்ளிகள் பெற்று 33ஆவது இடத்தை பிடித்தார். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால் இரண்டு இந்திய வீராங்கனைகளும் ஏமாற்றம் அளித்தனர்.
முன்னதாக மகளிர் 25 மீட்டர் ரெபிட் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் பங்கேற்றனர். அதில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகிய இருவரும் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சூழலில் தற்போது 50 மீட்டர் பிரிவில் இந்தியாவிற்கு பெரிய சோகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மகளிர் ஹாக்கி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா !