டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் விகாஸ் கிருஷ்ணன், மணிஷ் கௌசிக், ஆஷிஷ் குமார், அமித் பங்கல், சிம்ரன்ஜித் கவுர், மேரி கோம், ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர். 


இந்நிலையில், குத்துச்சண்டை மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றை வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு பூஜா ராணி முன்னேறியிருந்தார். இந்த போட்டியில், சீனாவின் லி குவினை எதிர்கொண்டார். முன்னாள் உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லி குவினை எதிர்த்து விளையாடினார். 






முதல் ரவுண்டில், 10-9 என்ற புள்ளி கணக்கில் லி குவின் முன்னிலை பெற்றுள்ளார். இரண்டாவது ரவுண்டிலும், சீன வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். மீண்டும் 10-9 என முன்னிலை பெற்றார். மூன்றாவது ரவுண்டையும் எளிதாக வென்ற அவர், பூஜாவை தோற்கடித்து அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் பூஜா ராணி வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவின் மூன்றாவது பதக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கும். காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து பதக்கம் ஏதும் இல்லாமல் பூஜா ராணி வெளியேறியுள்ளார். எனினும், அவரது முயற்சியை பாராட்டி அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 






முன்னதாக, அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து இரண்டாவது சுற்றில் பூஜா ராணி மோதினார். இதில் முதல் ரவுண்டில் அல்ஜிரியா வீராங்கனையை சிறப்பாக தாக்கி புள்ளிகளை பெற்றார். அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் பூஜா ராணி அசத்தலாக விளையாடினார். இரண்டு சுற்றுகளில் பூஜா ராணி அல்ஜிரிய வீராங்கனையைவிட அதிகமான புள்ளிகளை பெற்றார். மூன்றாவது சுற்றில் சரியான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டார்.  இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.