டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் பி.வி.சிந்து முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-7,21-10 என்ற கணக்கில் 28 நிமிடங்களில் வென்று அசத்தினார்.
இந்நிலையில் இரண்டாவது குரூப் போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை எதிர்த்து இன்று விளையாடினார். இதில் முதல் கேமை 13 நிமிடங்களில் பி.வி.சிந்து 21-9 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமையும் பி.வி.சிந்து 21-16 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் குரூப் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்று பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் குரூப் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி-சிராக் செட்டி 21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது. எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது.
இன்று மதியம் நடைபெறும் ஆடவர் குரூப் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் நெதர்லாந்து வீரர் மார்க் கால்ஜோவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது. குரூப் பிரிவில் முதல் போட்டியில் சாய் பிரணீத் தோல்வி அடைந்துள்ளதால் அவர் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கடந்து போட்டியில் அடைந்த தோல்விக்கு சாய் பிரணீத் நல்ல பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனி நபர் வில்வித்தை : இரண்டாவது சுற்றில் தருண்தீப் ராய் தோல்வி