2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை அண்மையில் காணொளியில் சந்தித்தார் பிரதமர் மோடி. இவர்களில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஐஸ் க்ரீம் சாப்பிட அழைப்பு விடுத்துள்ளார் அவர். பி.வி.சிந்து தனது பெற்றோருடன் காணொளி வழியாக பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி. ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் பி.வி.சிந்து தனது போனை உபயோகிப்பதற்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் முழுவதுமாக தடைவிதித்திருந்தார் அவருடைய பயிற்சியாளர் புல்லெல்லா கோபிசந்த். ‘ஐஸ்க்ரீம் சாப்பிட இப்போதும் உங்களுக்கு அனுமதி இல்லையா?’ என நகைச்சுவையாகக் கேட்டார் பிரதமர். அதற்கு பதிலளித்த சிந்து, தனது விளையாட்டுப் பயிற்சிக்கான டயட் காரணமாக ஐஸ்க்ரீம் மிகவும் அரிதாகவே சாப்பிடுவதாகச் சொன்னார் அவர். அதற்கு மறுபதிலளித்த பிரதமர் சிந்து டோக்கியோவிலிருந்து திரும்பியதும் அவரைத் தன்னுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட அழைப்பு விடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு தடகளப் போட்டியாளர்களின் வாழ்க்கை பற்றியும் தனது ஆன்லைன் சந்திப்பில் பகிர்ந்தார் பிரதமர்.

  






முன்னதாக, 2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ஆம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், வரும் ஜூலை 17-ம் தேதி ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற இந்திய வீரர் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல இருக்கின்றனர். 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர். அதை முன்னிட்டு, பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இந்திய அணியைச் சந்தித்து உரையாடினார். சர்வதேச வில்வித்தை தொடரில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு தனது உரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்த உரையாடலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் சரத் கமல், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை மேர் கோம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள், உங்களின் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்துங்கள்” என ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கினார். 


மேலும், மேரி கோமிடம் பேசும்போது யாரை உங்களது முன்மாதிரியாக பார்க்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மேரி கோம், “முகமது அலிதான் இன்ஸ்பிரேஷன்” என பதிலளித்தார். இளவேனில் வாளறிவன் பேசும்போது, “சிறிய தொடர்களில் முதலில் பங்கேற்க தொடங்கி இப்போது ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.


Also Read: ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறார் நடிகர் விஜய்!