டோக்கியோ ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி. இன்று அவருடைய சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. அதில் முதல் சுற்றில் இவர் நாடியாவை எதிர்த்து சண்டை செய்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டியின் இரண்டாவது சுற்றில் ஃபிரான்சு நாட்டின் ப்ரூனட் மானனை எதிர்கொண்டார். அதில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ப்ரூனட் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதன்பின்னர் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கிய போது அதிலும் ஃபிரான்சு வீராங்கனை மேலும் 3 புள்ளிகளை வேகமாக எடுத்தார். அதற்கு பவானி தேவியும் சரியாக ஈடு கொடுத்தார். அவரும் வேகமாக 4 புள்ளிகளை எடுத்தார். இதனால் ஸ்கோர் 11-6 என இருந்தது. இறுதியில் பரூனட் மானனான் 15-7 என்ற கணக்கில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.
இந்தியா சார்பில் முதல் முறையாக ஃபென்சிங் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றும் வரலாறு படைத்துள்ளார். சாதனையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறிய பவானிக்கு, பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், போட்டி முடிந்த கையோடு தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிவசமாக ஒரு பதிவை பவானி தேவி பகிர்ந்துள்ளார். அதில், ”இன்று, எனக்கு மிகப்பெரிய நாள். உற்சாகமாகவும், உணர்ச்சிவசமாகவும் இருந்தது. என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன் ஆனால், வெற்றி பெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் இந்தியர்களே! முடிவில்தானே தொடக்கம் உள்ளது. விடா முயற்சி செய்து, பிரான்சில் நடைபெற இருக்கும் அடுத்த ஒலிம்பிக் தொடரில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன். என்னோடு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.” என பதிவிட்டு இந்திய பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய விளையாட்டு அமைச்சர், மற்றும் அவருக்கு உதவி செய்த விளையாட்டு அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய மக்கள், அவரது அம்மா, பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டு பதிவை முடிந்து கொண்டார். வாழ்த்துகள் பவானி தேவி! அடுத்த முறை பதக்கம் கைகூடும்!