டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் இன்று, 74 கிலோ எடைபிரிவு போட்டியில் ஆஷிஷ் குமார் பங்கேற்றார்.


இந்த போட்டியில் , சீனாவின் எர்பைக்கை எதிர்த்து ஆஷிஷ் விளையாடினார். தொடக்கத்தில் சற்று சுதாரித்து கொண்ட ஆடிய ஆஷிஷ், அடுத்தடுத்து பின் தங்கினார். இதனால், போட்டி முடிவில் 0-5 என்ற கணக்கில் போட்டியில் தோல்வியடைந்தார். சமீபத்தில் தனது தந்தையை இழந்த ஆஷிஷ் குமார், ஒலிம்பிக் கனவோடு களமிறங்கினார். ஆனால், போட்டி முடிவு அவருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.










முன்னதாக, 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கௌசிக் பிரிட்டன் வீரர் லூக்கை எதிர்த்து மோதினார். இந்தப் போட்டியில் மணிஷ் கௌசிக் மற்றும் லூக் ஆகிய இருவரும் சிறப்பாக மாறி மாறி குத்து கொண்டனர். ஆனால், போட்டி முடிவில் 4-1 என்ற கணக்கில் மணிஷ் கெளசிக் தோல்வியுற்றார். இதே போல, மற்றொரு போட்டியில் இந்திவின் விகாஸ் கிருஷ்ணனும் முதல் சுற்றில் தோல்வியுற்று வெளியேறினார். இதனால், ஒலிம்பிக் 2020 தொடரில் குத்துச்சண்டை போட்டியில் இருந்து மூன்று இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளனர்.


முன்னதாக, 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங், ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து, மேரி கோம் இந்திய குத்துச்சண்டையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். எனினும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் இந்திய குத்துச்சண்டை அணிக்கு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. மொத்தம் 3 பேர் மட்டுமே ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். இப்போது ஐந்தாண்டுகளுக்கு பிறகு, 9 பேர் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றனர். சர்வதேச குத்துச்சண்டை தளத்தில் சிறந்த முறையில் பதக்கங்களை வென்றுள்ள இந்த வீரர் வீராங்கனைகள், ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும் இவர்கள் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களே.