டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இன்று நடைபெற்ற போட்டிகளில் முதலில் ஆடவர் பிரிவில் சரத் கமல் விளையாடினார்.  அவர் போர்ச்சுகல் வீரரை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதன் பின்னர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜியை போர்ச்சுகல் வீராங்கனை யூ ஃபூ  11-3,11-3,11-5,11-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து சுதிர்தா முகர்ஜி வெளியேறினார்.


இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் மானிகா பட்ரா இன்று ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த சோஃபியா போல்கானோவாவை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் கேமை போல்கனோவா 11-8 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமையும் ஆஸ்திரிய வீராங்கனை 11-2 என மிகவும் எளிதாக வென்றார். இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார். அடுத்து நடைபெற்ற மூன்றாவது கேமையும் போல்கனோவா 11-5 என்ற கணக்கில் வென்று 3-0 என முன்னிலை பெற்றார். எனவே போட்டியை வெல்ல வேண்டும் என்றால் அடுத்த நான்கு கேம்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மானிகா பட்ரா தள்ளப்பட்டார். 


இந்தச் சூழலில் நான்காவது கேமிலும் ஆஸ்திரிய வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 8-11,2-11,5-11,7-11 என்ற கணக்கில் மானிகா பட்ரா போல்கனோவாவிடம் தோல்வி அடைந்தார். டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் வரலாற்றில் எந்த ஒரு இந்திய வீரர் வீராங்கனையும் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் பங்கேற்றதில்லை. இம்முறை மானிகா பட்ரா மற்றும் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அதை உடைத்திருந்தனர். 


 








முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் மானிகா பட்ரா உக்ரைன் நாட்டின் மார்கர்டேயா பெசோடஸ்காவை எதிர்த்து விளையாடினார்.அந்தப் போட்டியில் மானிகா பட்ரா 4-11,4-11,11-7,12-10,5-11,11-7 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் முதல் இரண்டு கேம்களில் தோல்வி அடைந்தாலும் பின்னர் மீண்டு வந்து மனிகா சிறப்பான வெற்றியை பெற்றார். 


நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சத்யன் ஹாங்காங் வீரரிடம்  தோல்வி  அடைந்து வெளியேறினார்.  முதல் நாளில்  நடைபெற்ற கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-மானிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இன்று சுதிர்தா முகர்ஜியும் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தற்போது மனிகா பட்ராவும் வெளியேறியுள்ளார். டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சரத் கமல் மட்டும் இன்னும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது சுற்றில் நாளை விளையாட உள்ளார். 


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் சுமித் நகல் தோல்வி