டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் விளையாட்டில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் பி.வி சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் அவர், அரை இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
காலிறுதி போட்டியில், உலக பேட்மிண்டன் தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருக்கும் பி.வி சிந்து, 5வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் ஆட்டத்தை, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில், 16-16 என சம நிலையில் இருந்தனர். சவாலாக இருந்த போட்டியில், 22-20 என சிந்து போட்டியை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
அரை இறுதிப்போட்டியில் சீன தைபேவைச் சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீராங்கனையான தாய் சு-யிங்கை எதிர் கொள்ள உள்ளார். 22 வயதில் உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையாக முன்னேறிய அவர், சிந்துவுக்கு டஃப் ஃபைட் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இதுவரை, இரண்டு முறை ஒலிம்பிக் தொடரில் விளையாடி இருக்கும் தாய் சு-யிங், காலிறுதிக்கு முன்னேறும் முன்னரே தொடரில் இருந்து வெளியேறினார். இதனால், ஒலிம்பிக் பதக்கம் வெல்லாத தாய் சு-யிங் இந்த முறை அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பதக்கத்தை வெல்லும் முனைப்பில் இருக்கின்றார். அவரது வெற்றி வேட்கை, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் கடைசியாக அவர் பங்கேற்ற காலிறுதி சுற்றின் போது தெரிந்தது.
ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை பி.வி சிந்து, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். 2013-ம் ஆண்டு முதல் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிந்து, சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தபோது, பேட்மின்டன் உலகமே இந்த இளம் வீராங்கனையைத் திரும்பிப் பார்த்தது. இப்போது, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுவரை, சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் சிந்துவும் - தாய் சு-யிங்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில் 13-5 என்ற கணக்கில் வெறும் 5 முறை மட்டுமே சிந்து வெற்றி கண்டுள்ளார். எனினும், ஒலிம்பிக் போன்ற முக்கியமான தொடர்களில், தாய் சு-யிங் சொதப்புவது வழக்கமாக இருந்துள்ளதால், கடினமான சூழலிலும் நிதானமாக விளையாடி சிந்து போட்டியை வெல்வார் என்று தெரிகிறது. எது எப்படியோ, நாளைய போட்டியை தவறவிடாமல் பார்ப்பதற்கான அனைத்து அம்சங்களும் இருக்கின்றது. சில்வர் சிந்து கோல்டு சிந்துவாக இந்தியா திரும்புவாரா? பொறுத்திருப்போம்! வாழ்த்துகள் சிந்து!