டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நேற்று உடன் முடிவடைந்தன. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் பி.வி.சிந்து முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை 21-7,21-10 என்ற கணக்கில்  வென்று அசத்தினார்.  இரண்டாவது குரூப்  போட்டியில் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை 21-9,21-16 என்ற கணக்கில் வென்றார்.  இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச் ஃபெல்டிட்டை எதிர்த்து விளையாடினார். அதில் 21-15 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். இதன்மூலம் காலிறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.


இந்நிலையில் இன்று காலிறுதிச் சுற்றில் ஜப்பான் நாட்டின் அகேன் யமாகுச்சியை எதிர்த்து பி.வி. சிந்து விளையாடினார். உலக பேட்மிண்டன் தரவரிசையில் பி.வி.சிந்து 7ஆவது இடத்திலும் யமாகுச்சி 5ஆவது இடத்திலும் உள்ளார். எனவே இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் முதல் கேமில் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 23 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது கேமில் தொடக்க முதல் பி.வி.சிந்து புள்ளிகளை எடுத்தார். எனினும் யமாகுச்சி சுதாரித்து கொண்டு  ஆட தொடங்கினார். ஒரு கட்டத்தில் 4 புள்ளிகள் பின் தங்கியிருந்த யமாகுச்சி மீண்டு வந்து 16-16 என சமமாக வந்தார். இறுதியில் இரண்டாவது கேமை 22-20 என வென்று பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.  தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு சிந்து முன்னேறி அசத்தியுள்ளார். ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். 


 




 


முன்னதாக  ஆடவர் இரட்டையர் குரூப் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி-சிராக் செட்டி  21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது. எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது. 


அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் முதல் குரூப் போட்டியில்  இஸ்ரேல் வீரர் ஸில்பர்மேன் இடம் 21-17,21-15  என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இரண்டாவது குரூப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கெலிஜோவிடம் 21-14,21-14 என்ற கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார். தன்னுடைய இரண்டு குரூப் போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அவரும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் குரூப் பிரிவு போட்டியில் தரவரிசையில் தன்னைவிட மிகவும் பின்தங்கி இருந்த வீரர்களிடம் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 


மேலும் படிக்க:அசாம் வழியனுப்பி வைத்தது.. இந்தியா வரவேற்க காத்திருக்கிறது.. பதக்க மங்கை லோவ்லினா யார்?