டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி இன்று தனது கடைசி குரூப் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியிலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அதில் 13ஆவது நிமிடத்தில் க கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்தினார். முதல் கால்பாதியின் இறுதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது கால்பாதியின் தொடக்கத்தில் இந்திய அணி 17ஆவது நிமிடத்தில் ஒரு ஃபில்ட் கோல் அடித்து அசத்தியது. இதனால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இந்திய வீரர் பிரேந்திர லாக்ரா சிறிய தவறை பயன்படுத்தி கொண்ட ஜப்பான வீரர் டனாகா ஒரு கோல் அடித்தார். இதனால் ஜப்பான் அணி 1-2 என முன்னிலையை குறைத்தது.  முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற முன்னிலை பெற்றது. 


 






மூன்றாவது கால் பாதியின் தொடக்கத்தில் ஜப்பான் அணி மேலும் ஒரு ஃபில்டு கோல் அடித்து 2-2 என சமன் செய்தது. ஜப்பான் கோல் அடித்த அடுத்த நிமிடமே இந்திய ஒரு ஃபில்டு கோல் அடித்து 3-2 என மீண்டும் முன்னிலை பெற்றது. மூன்றாவது கால்பாதியின் இறுதியில் இந்திய அணி 3-2 என முன்னிலை வகித்தது. நான்காவது கால்பாதியின் தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் இரண்டு கோல்களை அடித்தது. ஜப்பான் அணியும் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது. அத்துடன் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக பெரும் மூன்றாவது வெற்றி இதுவாகும். 


இந்திய அணி முதல் குரூப் போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என வென்றது. அதன்பின்னர் இரண்டாவது குரூப் போட்டியில் 7-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது.  மூன்றாவது போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. நான்காவது குரூப் போட்டியில் இந்திய அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணி நான்கு  வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடம் பிடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிச் சுற்றுகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், யமாகுச்சியை வென்று அரையிறுதிக்கு பி.வி. சிந்து தகுதி !