மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 1994-ஆம் ஆண்டு பிறந்தவர் மீராபாய் சானு. இவர் தன்னுடைய சிறு வயதில் அதிகமாக விறகு உள்ளிட்டவற்றை தன்னுடைய வீட்டு தேவைக்காக சுமந்து சென்றுள்ளார். அவர் அப்போது செய்த இந்த வேலை பின்நாட்களில் அவருடைய பளுத்தூக்குதலுக்கு உதவியாக இருந்துள்ளது. தன்னுடைய 11 வயதில் முதல் முறையாக உள்ளூர் பளுதூக்குதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பின்னர் தேசிய அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று முழு முனைப்புடன் இருந்தார். 


மீராபாய் சானுவின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலனாக, டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். பதக்கம் வென்று இன்று இந்தியா திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத் மாதா கி ஜெய் என அனைவரும் கோஷமிட, உற்சாகமாக வரவேற்றனர். 






டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய அவருக்கு, மற்றுமொரு சிறப்பாக, மீராபாய் சானுவிற்கு மணிப்பூர் மாநில காவல்துறையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். 










டெல்லி விமான நிலையம் வந்தடைந்த மீராபாய் சானு, “அதீத அன்பும் ஆதரவுக்கும் மத்தியில் இந்தியாவிற்கு திரும்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் மிக்க நன்றிகள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஒலிம்பிக் பதக்கம் வென்றவுடன்,தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றியைப் பதிவு செய்திருந்தார் வெள்ளிமகள் மீராபாய் சானு.






அவரது பதிவில், ‘என் கனவு நனவானது. எனது இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.எனக்காகப் பிரார்த்தனை செய்த பலகோடி இந்தியர்களுக்கு நன்றி. அவர்களது பிரார்த்தனை என்னுடன் இருந்தது.என் குடும்பம் குறிப்பாக என் அம்மாவுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்காகப் பல தியாகம் செய்தார் என் மீது நம்பிக்கை வைத்தார்.மேலும் இந்திய அரசு, விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் அசோஷியேஷன், பளுதூக்கும் ஃபெடரேஷன், ரயில்வே துறை உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட நன்றி.இந்தப் பயணத்தில் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்த ஸ்பான்ஸர்களுக்கு நன்றி.எனது கோச் விஜய் சர்மா சார் மற்றும் இதர ஊழியர்களுக்கு நன்றி.ஒட்டுமொத்த பளுத்தூக்கும் துறைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ஜெய்ஹிந்த்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.