ஒலிம்பிக் 2020ல் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்த மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மேரி கோம்.மீராவை ஆரத்தழுவி வாழ்த்தும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மேரி கோம்.  தனது பதிவில், வாழ்த்துகள் மீராபாய் சானு. ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொள்வதில் உணர்ச்சிவயப்பட்டும் மகிழ்ச்சியாகவும் உள்ளோம். ஒரே புகைப்படத்தில் இந்தியாவின் வீராங்கணையும் அவரால் பெருமிதம் கொண்ட மணிப்பூரியும் உள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 






முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர் இந்தப் பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில்  115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சீனாவின் ஹோ சிஹாய் தங்கப்பதக்கத்தை வென்றார். 






கர்ணம் மல்லேஸ்வரி 2000ஆம் ஆண்டு 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் 21ஆண்டுகளுக்கு மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவை பலரும். பாராட்டி வருகின்றனர். இந்தப் போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் மீராபாய் சானு 90 கிலோவிற்கு மேல் தூக்கி இருந்தால் தங்கப்பதக்கம் அவருக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும். எனினும் அவர் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதகக்த்தை உறுதி செய்துள்ளார்.


இதற்கிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார் வெள்ளிமகள் மீராபாய் சானு. அவரது பதிவில், ‘என் கனவு நனவானது. எனது இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எனக்காகப் பிரார்த்தனை செய்த பலகோடி இந்தியர்களுக்கு நன்றி. அவர்களது பிரார்த்தனை என்னுடன் இருந்தது. என் குடும்பம் குறிப்பாக என் அம்மாவுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்காகப் பல தியாகம் செய்தார் என் மீது நம்பிக்கை வைத்தார். மேலும் இந்திய அரசு, விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் அசோஷியேஷன், பளுதூக்கும் ஃபெடரேஷன், ரயில்வே துறை உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட நன்றி. இந்தப் பயணத்தில் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்த ஸ்பான்ஸர்களுக்கு நன்றி.எனது கோச் விஜய் சர்மா சார் மற்றும் இதர ஊழியர்களுக்கு நன்றி.ஒட்டுமொத்த பளுத்தூக்கும் துறைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ஜெய்ஹிந்த்!’ எனக் குறிப்பிட்டிருந்தார்.