டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்நிலையில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ எடைப்பிரிவிலும், தீபக் பூனியா 87 கிலோ எடைப்பிரிவிலும், அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவிலும் போட்டியிட்டனர். 


கொலம்பிய அணி வீரர் ஆஸ்கருக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் களமிறங்கிய ரவிக்குமார் தாஹியா, 13-2 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில், பல்கேரியாவைச் சேர்ந்த ஜார்ஜி வேலண்டினோவை எதிர்த்து போட்டியிட்ட அவர், 14-4 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்றார். இன்னும் ஒரு போட்டியில் வென்றால், ரவிக்குமார் தாஹியா பதக்கம் வெல்வது உறுதி செய்யப்படும். இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் அரை இறுதிப்போட்டியில் கசகிஸ்தானின் சனயேவ் நூரிஸ்லாமை எதிர் கொள்கிறார்.






23 வயதாகும் ரவிக்குமார் தஹியா, 2015ஆம் ஆண்டு ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பிரபலம் அடைய தொடங்கினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 57 கிலோ பிரிவில் இவர் 4ஆம் நிலை வீரராக உள்ளார். இதனால் குறைந்தப் பட்சம் இவர் ஒரு வெண்கலம் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. 


இதே போல, மற்றொரு போட்டியில், 87 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தீபக் பூனியா, முதல் சுற்று போட்டியில் நைஜீரிய வீரர் அகியோமர் எக்ரெக்மேவை எதிர்த்து போட்டியிட்டார். இதில், 12-1 என்ற புள்ளிக்கணக்கில் அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அவர். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில், சீன வீரர் லின் சுஷினை எதிர்த்து விளையாடி 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அரை இறுதிக்கு முன்னேறியுள்ள அவர், இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், பதக்கம் வெல்வது உறுதியாகும். 






ஒரே நாளில், இரண்டு வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. 


பெண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் அன்ஷு மாலிக், சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பல்கேரியாவின் இரியானா குராச்கினாவை எதிர்த்து விளையாடினார்.






இந்த போட்டியில் 2-8 என்ற புள்ளிக்கணக்கில் அன்ஷூ மாலிக் போட்டியை இழந்தார். இதனால், காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். எனினும், மல்யுத்த ரெபிசாஜ் முறைப்படி வெண்லகப் பதக்கம் வெல்வதற்கான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அன்ஷூ மாலிக்கிற்கு உள்ளது. 19 வயதேயான அன்ஷூ மாலிக், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.