டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  கொலம்பிய அணி வீரர் ஆஸ்கருக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் களமிறங்கிய ரவிக்குமார் தாஹியா, 13-2 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில், பல்கேரியாவைச் சேர்ந்த ஜார்ஜி வேலண்டினோவை எதிர்த்து போட்டியிட்ட அவர், 14-4 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்றார்.  அரையிறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். இதில் கஜகிஸ்தான் வீரரை பின் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா ரஷ்யாவின் உகுயேவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் இருவரும் சிறப்பாக மல்யுத்தம் செய்தனர்.  ரஷ்ய வீரர் 4 புள்ளிகளும் ரவிக்குமார் 2 புள்ளியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ரவுண்டில் இருவரும் சிறப்பாக சண்டை செய்தனர். இறுதியில் 7-4 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் வென்றார். இதனால் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார். சுஷில் குமாருக்கு பிறகு மல்யுத்த விளையாடில் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவிக்குமார் பெற்றுள்ளார். 


 






முன்னதாக இன்று காலை நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் பங்கேற்றார். இவர் முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனையை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிச் சுற்றில் பெலாரஷ்ய வீராங்கனை வனிசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார். 53 கிலோ எடைப்பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக இருந்த வினேஷ் போகட் காலிறுதியில் தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. பெலாரஷ்ய வீராங்கனை அரையிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதனால் வினேஷ் போகட் ரெபிசாஜ் ரவுண்டிற்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் வினேஷ் போகட் வெளியேறி உள்ளார். 


இன்று காலை மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் ரெபிசாஜ் ரவுண்டில் பங்கேற்றார். அவர் ரஷ்யாவின் வெலேரியாவிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்திற்கு போட்டியிடம் வாய்ப்பை இழந்தார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். 


மேலும் படிக்க: இந்தியா ஆடவர் ஹாக்கியின் வீழ்ச்சியும் எழுச்சியும்! 41 ஆண்டுகளுக்குப் பின் சாதித்தது எப்படி?