ஒலிம்பிக் தொடங்கிய முதல் நாளான இன்று, இந்தியாவைப் பொருத்தவரை கொண்டாட்டமும், வருத்தமும் கலந்து இருக்கிறது. பளுதூக்குதல் போட்டியில் மீரா பாய் சானுவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன், சவுரப் சவுத்ரி, தீபிகா குமாரி உள்ளிட்டவர்கள் ஏமாற்றம் அளித்தனர்.


டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்ற மானிகா பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இளம் வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தடம் பதித்து முதல் சுற்றை வென்று முன்னேறுவதே மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. 


அந்த வரிசையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராணிக்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் சீன தைப்பேவைச் சேர்ந்த வீரர்களை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில், 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து, பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 






இதே போல, ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்க இருந்த ஒரு வீரர் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியதால், இந்தியாவைச் சேர்ந்த சுமித் நகல் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றார். இன்று அவர் விளையாடிய முதல் சுற்று போட்டியில், உஸ்பெக்கிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-4, 6-7, 6-4  என்ற செட் கணக்கில் சுமித் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 






வெற்றிகரமாக முதல் சுற்றை கடந்த சுமித்திற்கு, அடுத்த போட்டி கடினமாகவே இருக்கும். இரண்டாவது சுற்றில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வெடெவை எதிர்கொள்ள உள்ளார். இந்த போட்டி அவருக்கு சவாலானதாக இருக்கும். எனினும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சுமித் நகல் ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.






சுதந்தரத்திற்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் டென்னிஸ் போட்டியை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்தியர் ஒருவர் முதல் சுற்றில் வென்றுள்ளார். இதற்கு முன்பாக, 1988-ம் ஆண்டு சீஷன் அலி, 1996-ம் ஆண்டு லியாண்டர் பயஸ் மற்றும் அவரைத் தொடர்ந்து 2021 ஒலிம்பிக் தொடரில் சுமித் ஒரு டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். லியாண்டர் பயஸ் வெற்றி பெறும்போதே சுமித் பிறந்திருக்கவில்லை, இப்போது 23 வயதேயான அவர் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.