டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் காலிறுதி போட்டியில், உலக தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் இந்தியா, தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 41 ஆண்டுகால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 22 நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு லீட் கொடுத்தார். இரு அணி வீராங்கனைகளும் சிறப்பக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, போட்டியில் அடுத்த கோல் அடிக்கப்படவில்லை. இந்த போட்டியில் மட்டும் 7 முறை பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் ஆஸ்திரேலியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில், 1- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. 3 முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய மகளிர் அணியின் தவிர்க்க முடியாத, ஒரே சாய்ஸாக தேர்வு செய்யப்பட்டவர் கோல் கீப்பர் சவிதா பூனியா. ரியோ ஒலிம்பிக் தொடரின்போது, மிகவும் மோசமான தோல்விகளைச் சந்தித்து இந்திய மகளிர் அணி வெளியேறியது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் அனைவரும் தங்களது ஆட்டத்தை மெருகேற்றிக் கொண்டனர். இந்த ஒலிம்பிக் தொடரில், அது கைகொடுத்தது. இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீராங்கனைகள், 1 கோல் மட்டுமே அடித்திருந்தாலும், ஆஸ்திரேலியாவின் 7 பெனால்டி வாய்ப்புகளை தடுத்து நிறுத்தினர்.
போட்டியில் முதல் கோல் அடித்தது முதலே இந்தியா ஆஸ்திரேலியாவை விட லீடில் இருந்தது. ஒவ்வொரு முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதும் இந்திய அணியின் தடுப்புச் சுவராய் நின்ற சவிதா பூனியா, சிறப்பாக தடுத்தார். ஆஸ்திரேலியாவின் பெனால்டி வாய்ப்புகளை கோலாக விடாமல் தடுத்ததே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியது.
போட்டியின் கடைசி மூன்று நிமிடங்களின்போது, ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. சவிதாவும் மற்றொரு வீராங்கனையான மோனிகாவும் சேர்ந்து அந்த பெனால்டி வாய்ப்பை லாவகமாக தடுத்துனர். அழுத்தமான கடைசி நேர பெனால்டி ஷாட்களையும் இந்திய அணி தடுத்தது. சில போட்டிகளை கோல்கள் வென்று தரும்,சில போட்டிகளை தடுப்பாட்டம் வென்று தரும். அந்த வரிசையில், இன்றைய போட்டியில் குர்ஜித் கவுரின் ஒற்றை கோலும், இந்திய அணியின் தடுப்பாட்டமும் காலத்திற்கு நின்று பேசும்! வாழ்த்துகள் மகளிர் ஹாக்கி டீம்!