டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் காலிறுதி போட்டியில், உலக தரவரிசைப் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் இந்தியா, தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 41 ஆண்டுகால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளதால், மிகவும் எதிர்பாக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. 


’மைட்டி ஆஸ்திரேலியா’ என சொல்லும் அளவிற்கு, சிறப்பாக விளையாடக் கூடிய ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி இன்று களமிறங்கியது. ஆனால், போட்டியின் ஒவ்வொரு 15 நிமிடங்களையும் இந்திய அணி போட்டியை தன் பக்கம் வைத்திருந்தது. 


போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 22 நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு லீட் கொடுத்தார். இரு அணி வீராங்கனைகளும் சிறப்பக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, போட்டியில் அடுத்த கோல் அடிக்கப்படவில்லை. இந்த போட்டியில் மட்டும் 7 முறை பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் ஆஸ்திரேலியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில், 1- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. 3 முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.






கடந்த 2016 ஒலிம்பிக் தொடரின்போது, 1-6 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வியடைந்த இந்தியா, இந்த ஒலிம்பிக்கில் திருப்பி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில்தான் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் ஹாக்கி அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, இந்திய அணி 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 4ஆவது இடத்தில் இருந்தது. குரூப் பிரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், நேற்று நடைபெற்ற அயர்லாந்து - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அயர்லாந்து தோல்வியை தழுவியதால், இந்தியாவுக்கு காலிறுதியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இந்திய அணி, காலிறுதி போட்டியை வென்று அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


அதே போல, கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு ஆண்கள் ஹாக்கி அணி தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. வரும் 3ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடுகிறது.