டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் ஹீ பிங்கை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிந்து 21-13,21-15 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார். ரியோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து டோக்கியோவில் வெண்கலம் வென்று தொடர்ச்சியா இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இந்தப் போட்டியை தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சு யிங் 18-21,21-19,18-21 என்ற கணக்கில் சீன வீராங்கனை சென் யூஃபை இடம் தோல்வி அடைந்தார். 


இந்நிலையில் இந்தப் போட்டிக்கு பிறகு தாய் சு யிங் மிகுந்த வறுத்தத்துடன் இருந்துள்ளார். அப்போது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தாய்சுவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மூன்றாவது முறையாக என்னுடைய கனவை அடைய நான் முயற்சி செய்தேன். அதில் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி இருந்தேன். எனினும் என்னால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. அது சற்று வருத்தமாக உள்ளது. இனிமேல் என்னால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் கூட போகலாம். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.




என்னுடைய இறுதிப் போட்டிக்கு பிறகு நான் சிறிய வருத்தத்துடன் இருந்தேன். அப்போது பி.வி.சிந்து ஓடி வந்து என்னை கட்டிபிடித்து , "உனக்கு உடம்பு சரியில்லை என்று எனக்கு தெரியும். நீ நன்றாக விளையாடினாய். இன்று உன்னுடைய நாளாக அமையவில்லை. இந்த வழி எனக்குப் புரியும்" எனக் கூறினார். அவர் எனக்கு அளித்த அறுதல் எனக்கு அழுகை வர வைத்தது. என்னுடன் சேர்ந்து பயணித்த சிந்துவிற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். 


 






ரியோ ஒலிம்பிக் இறுதியில் போட்டியில் இதேபோன்று பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். அப்போது அவரும் இதேபோன்ற ஒரு மனநிலையில் இருந்திருப்பார். அதனால் அதை சரியாக புரிந்து கொண்டு சிந்து தாய்சுவிற்கு ஆறுதல் கூறியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விஷயத்தை  ரசிகை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் பி.வி.சிந்துவின் செயல் அவர்களை மிகவும் நெகிழ வைத்துள்ளது. அந்தப் பதிவை ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் லைக் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க: ‛தங்கமே தங்கமே எம்பட தங்கமே...’ கோல்டு அடிக்கவில்லை என்றாலும் நம்ம தங்கங்கள் இவங்க தான்!