2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் தொடர இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், டோக்கியோவுக்கு செல்ல இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகளைப் பற்றியும், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்புகள் பற்றியும் ஒரு சின்ன அலசல்!
ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ள குத்துச்சண்டை வீரர் வீராங்கனைக்ள்:
- அமித் பங்கல் (52 கிலோ)
- மனிஷ் கெளசிக் (63 கிலோ)
- ஆஷிஷ் குமார் (69 கிலோ)
- விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ)
- சதீஷ் குமார் (91 கிலோ)
- மேரி கோம் (51 கிலோ)
- சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ)
- லோவ்லினா பார்கோயின் (69 கிலோ)
- பூஜா ராணி (75 கிலோ)
2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங், ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து, மேரி கோம் இந்திய குத்துச்சண்டையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். எனினும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடர் இந்திய குத்துச்சண்டை அணிக்கு சிறப்பாக அமைந்திருக்கவில்லை. மொத்தம் 3 பேர் மட்டுமே ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். இப்போது ஐந்தாண்டுகளுக்கு பிறகு, 9 பேர் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். சர்வதேச குத்துச்சண்டை தளத்தில் சிறந்த முறையில் பதக்கங்களை வென்றுள்ள இந்த வீரர் வீராங்கனைகள், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
ஆண்களுக்கான 52 கிலோ எடை பிரிவில் பங்கேற்க இருக்கும் அமித் பங்கல், பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது, சர்வதேச குத்துச்சண்டை தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அமித் பங்கல், தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இவர், இந்த தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். ஒலிம்பிக்கிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குத்துச்சண்டை அணியில் சீனியரான விகாஸ் கிருஷ்ணன், கடந்த 10 ஆண்டுகளாக குத்துச்சண்டை தளத்தில் தனக்கான ஒரு இடத்தை பதிவு செய்தவர். 2012 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற இவர், 69 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் தனது தந்தையை இழந்த ஆஷிஷ் குமார், ஒலிம்பிக் கனவோடு 69 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்ள உள்ளார். இதே போல, சதிஷ் குமார் மற்றும் மனிஷ் கெளசிக் ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்திய வீராங்கனைகளை பொருத்தவரை, பரிச்சயமான மேரி கோம், தனது 38 வயதில் மற்றுமொரு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில், மேரி கோம் நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, சிம்ரன்ஜித் கவுர் மற்றும் பூஜா ராணி ஆகியோர் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய குத்துச்சண்டை அணி, பதக்கம் வென்று வர வாழ்த்துகள்!