டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  டோக்கியோ ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கான கிராமம் திறக்கப்பட்டு அங்கு மெல்ல அனைத்து நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது சில நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அங்கு தங்கியுள்ளனர். இந்தியாவில் இருந்து நேற்று 88 வீரர் வீராங்கனைகளுடம் கூடிய குழு நேற்று டோக்கியோ புறப்பட்டது. 


இந்நிலையில் டோக்கியோவில் வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் விளையாட்டு வீரர் இல்லை. ஆனால் தற்போது இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு அங்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரே விளையாட்டில் பங்கேற்க உள்ளவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  அந்த நாட்டைச் சேர்ந்த மற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் தற்போது கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.




இதன் காரணமாக விளையாட்டு கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப்படுத்தப்படுள்ளன. தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில் அங்கு கொரோனா வைரஸ் தடுப்பில் ஒலிம்பிக் குழு மிகவும் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஒலிம்பிக் குழு, "கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். குறிப்பாக மக்கள் யாருமே இந்த விளையாட்டு கிராம பகுதிக்கு அருகே வர முடியாது. மேலும் பல கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர். 




டோக்கியோ நகருக்கு தற்போது வரை வீரர் வீராங்கனைகள் மற்றும் பத்திரிகையளர்கள், பயிற்சியாளர்கள் என சராசரியாக 18ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். இவர்களில் சுமார் 9 ஆயிரம் முதல் 11 பேர் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்க உள்ளனர். எனவே அங்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது ஒலிம்பிக் போட்டிகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி சார்பில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளும் நேற்று இரவு கிளம்பி இன்று காலை டோக்கியோ சென்றடைந்துள்ளனர். இந்தச் சூழலில் அங்கு வீரர்கள் சிலருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இன்னும் 5 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: டோக்கியோ புறப்பட்ட இந்தியப் படை !