டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலை பொறுத்தவரை இரண்டு தகுதிச் சுற்றுகள் நடைபெறும். முதல் தகுதிச் சுற்றில் இருந்து 8 அணிகள் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது தகுதிச்சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் 3ஆவது மற்றும் 4-ஆவது அணிகள் வெண்கலப்பதக்கத்திற்கும், முதலாவது மற்றும் இரண்டாவது அணிகள் தங்கப்பதக்கத்திற்கும் போட்டியிடுவார்கள். தங்கம் மற்றும் வெண்கலப்பதக்க போட்டிகளில் முதலில் 16 புள்ளிகளை பெறும் அணி வெற்றி பெறும்.
இந்நிலையில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் கலப்பு போட்டி நடைபெற்றது. இதில் முதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில்-திவ்யான்ஷ் சிங் மற்றும் அஞ்சும் மோட்கில்-தீபக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இளவேனில் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் மொத்தமாக 626.5 புள்ளிகள் பெற்று 12ஆவது இடத்தை பிடித்தனர். அஞ்சும் மோட்கில்-தீபக் குமார் 623.8 புள்ளிகள் எடுத்து 18ஆவது இடத்தை பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். எனவே இரண்டு இந்திய அணிகளும் தகுதிச் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
மனு பாக்கர்-சவுரப் சௌதரி இணை இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 8 இடங்களுக்குள் வராததால் அபிஷேக் வெர்மா-யாஷஸ்வினி தேஸ்வால் இணை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து நடைபேற்ற இரண்டவது தகுதிச் சுற்றில் மனு பாக்கர்-சவுரப் சௌதரி 380 புள்ளிகள் பெற்று 7ஆவது இடத்தை பிடித்தனர். இதனால் வெண்கலப்பதக்கம் மற்றும் தங்கப்பதக்கம் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர். துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு மீண்டும் ஏமாற்றம் தொடர்ந்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைஃபிள் போட்டிகள் இத்துடன் முடிவிற்கு வந்துள்ளன. அடுத்து 25 மீட்டர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் முடிவிற்கு வந்த இந்திய பயணம்.. சரத் கமல் தோல்வி..!