டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம்பெற்று வருகிறது. 


இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 60-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 51வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலப்பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது. 


ஒலிம்பிக்கில் இந்தியா இன்று: 


வில்வித்தை:  இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அடானு தாஸ் ஜப்பான் வீரர் ஃபுருகாவாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை ஜப்பான் வீரர் ஃபுருகாவா 27-25 என்ற கணக்கில் வென்று 2-0 என முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இருவரும் தலா 28 புள்ளிகள் எடுத்தனர். இதனால் இருவருக்கும் ஒரு செட் புள்ளிகள் வழங்கப்பட்டன. ஜப்பான் வீரர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். மூன்றாவது செட்டை 28-27 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்று 3-3 என சமம் செய்தார். நான்காவது செட்டிலும் இரு வீரர்களும் 28-28 என சமமாக புள்ளிகள் எடுத்தனர். இதனால் 4-4 என இருவரும் சமநிலையில் இருந்தனர். போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டை ஜப்பான் வீரர் 27-26 என வென்றார். அதன்மூலம் போட்டியையும் 6-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் அடானு தாஸ் வில்வித்தை போட்டியிலிருந்து வெளியேறினார்.






குத்துச்சண்டை: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 52 கிலோ குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் பங்கேற்றார். இந்த எடைப்பிரிவில் அமித் பங்கால் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் ஆவார். இவருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இன்று அமித் பங்கால் கொலம்பியா நாட்டின் மார்டினஸ் ரிவாஸை எதிர் கொண்டார். இந்த போட்டியில், 4-1 என்ற கணக்கில் கொல்ம்பியா வீரர் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து அமித் பங்கால் ஏமாற்றம் அளித்தார். 


குத்துச்சண்டை மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றை வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு பூஜா ராணி முன்னேறியிருந்தார். இந்த போட்டியில், சீனாவின் லி குவினை எதிர்கொண்டார். முன்னாள் உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லி குவினை எதிர்த்து விளையாடினார். இதில், மூன்று ரவுண்டுகளையும் வென்று லி குவின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 


வட்டு எறிதல்: தடகளத்தில் இன்று மகளிர் வட்டு எறிதலுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. க்ரூப் ஏ சுற்றில் 64 மீட்டருக்கும் குறைவாக வீசி இந்தியாவின் சீமா பூனியா ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து, இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் பங்கேற்றார். இந்த போட்டியில், அவர் 60.29 மீ, 63.97மீ, 64 மீ வீசி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 






மகளிர் ஹாக்கி: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது. 41 ஆண்டுகால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. 


துப்பாக்கிச் சுடுதல்: மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா சார்பில் அஞ்சும் மோட்கில் மற்றும் தேஜஸ்வினி சாவந்த் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில் 3 முறையில் துப்பாக்கிச்சுடுதல் செய்ய வேண்டும். முதலில் நீலிங், ப்ரோனிங் மற்றும் ஸ்டான்டிங் ஆகிய மூன்று வகையில் வீராங்கனைகள் சுட  வேண்டும். 3 பிரிவுகளிலும் சேர்த்து அஞ்சும் மோட்கில் 1167 புள்ளிகள் பெற்று இடத்தை 15 ஆவது இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை தேஜேஸ்வினி சாவந்த் , 1154 புள்ளிகள் பெற்று 33ஆவது இடத்தை பிடித்தார். தகுதிச் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால் இரண்டு இந்திய வீராங்கனைகளும் ஏமாற்றம் அளித்தனர். 






பேட்மிண்டன்: பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப்போட்டியில் சீன தைபேவைச் சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீராங்கனையான தாய் சு-யிங்கை பிவி சிந்து எதிர்கொண்டார்.இந்த போட்டியில், 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தாய் சு-யிங் வென்றார். இதனால் இந்த போட்டியில் சிந்து தோல்வியைடைந்தார். இப்போது, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், சீனாவின் ஹி பிங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.