கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ளனர். 


கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் தொடர்கள் நடந்து முடியும் வரை, அதாவது ஆகஸ்டு 22-ம் தேதி வரை டோக்கியோவில் அவசரநிலை கடைபிடிக்கப்படும் என ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹே முன்னரே அறிவித்திருந்தார். 






கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஜப்பான் நாட்டு மக்களும் ஒலிம்பிக் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


கொரோனா பரவல் இன்றி, ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான விளையாட்டு தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றது. இந்நிலையில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, வரலாறு காணாத கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை டோக்கியோ சந்தித்துள்ளது. ஜூலை 27-ம் தேதி நிலவரப்படி, ஒரே நாளில் 2,848 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 



ஒலிம்பிக் தொடர் நடைபெறும் கிராமத்தில் மட்டும் கிட்டத்தட்ட 160 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில், ஆகஸ்டு 8 வரை பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடர் நடத்தப்படுமா என்பதில் சிக்கல் நிலவுகிறது.


இந்த தருணத்தில், உலக சுகாதார மையத்தின் இயக்குனர், மருத்துவர். டெட்ரோஸ், ஒலிம்பிக் தொடர் நடைபெற்று முடியும் தருவாயில், கொரோனா பாதிப்பால் 1,00,000க்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ”கொரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம். இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழ்ந்துள்ளனர். இனியும் மக்கள் உயிரிழக்கக்கூடும்.” என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.