ஒலிம்பிக் தொடங்கிய முதல் நாளன்று, இந்தியாவைப் பொருத்தவரை கொண்டாட்டமும், வருத்தமும் கலந்ததாக இருந்தது. பளுதூக்குதல் போட்டியில் மீரா பாய் சானுவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன், சவுரப் சவுத்ரி, தீபிகா குமாரி உள்ளிட்டவர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற போட்டிகளிலும் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர் வீராங்கனைகள் ஏமாற்றத்தை அளித்தனர். எனினும், மானிகா பத்ரா, சாத்விக்-சிராக், சுதிர்தா முகர்ஜி, பவானி தேவி, சுமித் நகல் உள்ளிட்ட இளம் வீரர் வீராங்கனைகள் முதல் சுற்றை கடந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று நம்பிக்கை அளித்தனர்.
இந்நிலையில்,இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 33-வது இடத்தில் உள்ளது. 8 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களுடன் ஜப்பான் முதல் இடத்திலும், 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 6 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டிகளைப் பெருத்தவரை, டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். ஃபென்சிங் போட்டிகளில் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து பவானி தேவி வெளியேறினார். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நகல் தோல்வி அடைந்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் குரூப் போட்டியில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் இரண்டாவது குரூப் போட்டியில் உலகின் நம்பர் இரட்டையர் இணையான இந்தோனேஷியாவின் கேவின் சஞ்சையா மற்றும் மார்கஸ் ஜோடியை எதிர்த்து களமிறங்கியது. 21-13,21-12 என்ற நேர் செட் கணக்கில் உலகின் நம்பர் ஒன் இரட்டையர் இணை இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் செட்டியை தோற்கடித்தனர்.
74 கிலோ எடைபிரிவு போட்டியில் ஆஷிஷ் குமார் பங்கேற்றார். இந்த போட்டியில் , சீனாவின் எர்பைக்கை எதிர்த்து ஆஷிஷ் விளையாடினார். தொடக்கத்தில் சற்று சுதாரித்து கொண்ட ஆடிய ஆஷிஷ், அடுத்தடுத்து பின் தங்கினார். இதனால், போட்டி முடிவில் 0-5 என்ற கணக்கில் போட்டியில் தோல்வியடைந்தார்.
ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஜன் பிரகாஷ், 1:57.22 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து, 8 பேர் பங்கேற்ற போட்டியில் நான்காவதாக நிறைவு செய்தார். ஆனால், மொத்தம் 38 பேர் கலந்து கொண்ட இந்த பிரிவு போட்டியில், சஜன் 24-வது இடத்தில் நிறைவு செய்தார். இந்த பிரிவில், டாப் 16 இடங்களில் வருபவர்கள் அரை இறுதிக்கு போட்டிக்கு முன்னேறுவர். அதனால், சஜன் பிரகாஷ் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி மகளிர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது.