டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் போட்டியில் இன்று இந்திய மகளிர் அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் பிரிட்டன் அணி முதல் கோல் அடித்து அசத்தியது. அதன்பின்னர் மீண்டும் கிடைத்த ஒரு வாய்ப்பில் ஃபில்ட் கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் கால்பாதியின் முடியில் இந்திய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் இந்திய மகளிர் அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திய இந்திய அணியின் குர்ஜீத் கவுர் கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் முன்னிலையை குறைத்தது. இதன்பின்னர் நடைபெற்ற 3ஆவது கால்பாதியில் பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது. கடைசி கால்பாதியில் பிரிட்டன் அணி மேலும் ஒரு கோல் அடித்து 4-1 என முன்னிலையை உயர்த்தியது. இறுதியில் பிரிட்டன் அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணிக்கு நடப்பு ஒலிம்பிக் தொடரில் இது மூன்றாவது தோல்வி ஆகும்.
3ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி ஜெர்மனி, பிரிட்டன், ஐயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடம் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. முதல் குரூப் போட்டியில் இந்திய மகளிர் அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் ஜெர்மனி உடன் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. குரூப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.இந்திய அணி தற்போது 3 தோல்விகளுடன் ஏ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மிச்சம் உள்ளது. இந்திய மகளிர் அணி நாளை மறுநாள் காலை 8.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஐயர்லாந்து மகளிர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இனிமேல் நடைபெற உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்றால் மட்டுமே இந்திய மகளிர் அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற சற்று வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனி நபர் வில்வித்தை : முதல் சுற்றில் தருண்தீப் ராய் வெற்றி..!