டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதியில் தாய்சு யிங் இடம் தோல்வி அடைந்தார். இதனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார்.  இந்தப்போட்டியில்  சிறப்பாக விளையாடிய சிந்து 21-13, 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தையும் வென்று  அசத்தினார். ஏற்கெனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்த பி.வி.சிந்து  ஒலிம்பிக் வரலாற்றில் தன்னுடைய இரண்டாவது பதக்கத்தை பெற்றார். இதன்மூலம் சுஷில் குமாருக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 




இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து நாடு திரும்பிய பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அத்துடன் அவருக்கு பலரும் பரிசுகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி ஆந்திர மாநில அரசு அவருக்கு 30 லட்சம் ரூபாய் பரிசை அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 25 லட்சம் ரூபாய் பரிசை தருவதாக கூறியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் அவருக்கு 25 லட்சம் ரூபாயும், பைஜூஸ் நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும் பரிசாக அவருக்கு கிடைக்க உள்ளது. 






முன்னதாக 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பலரும் பரிசுகளை அள்ளி தந்துள்ளனர். அதன்படி ஹரியானாவில் அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு சார்பில் அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசை அறிவித்துள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 1 கோடி ரூபாய் பரிசை வழங்கவதாக தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியும் தன்னுடைய பங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசும் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டரை குறிக்கும் வகையில் 8758 என்ற நம்பரில் ஒரு ஜெர்ஸியையும் வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. மணிப்பூர் அரசும் தன் பங்குக்கு நீரஜ் சோப்ராவிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசை அறிவித்துள்ளது.  அந்த வகையில் தற்போது பி.வி.சிந்துவும் பரிசு மழையில் நனைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஒலிம்பிக் பதக்கத்தை கடித்த மேயர்... இப்போ இப்படி ஒரு முடிவா?