டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்குகின்றன. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்கவேலு மாரியப்பன் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், விமான பயணத்தின்போது மாரியப்பனுக்கு அருகில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், டோக்கியோ விரைந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், இன்று மாலை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திச் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் கொடி ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






எனினும், கொரோனா பரிசோதனை முடிவுகளில் மாரியப்பனுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்க விழாவில் பங்கேற்காமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் அணி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


பாராலிம்பிக் போட்டிகளில், உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். 


ரியோ பாராலிம்பிக்கில், 19 வீரர் வீராங்கனைகளுடன் களமிறங்கிய இந்தியா, 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பாராலிம்பிக் வரலாற்றில் தனது சிறந்த பர்ஃபாமென்ஸை பதிவு செய்தது.இந்நிலையில், மூன்று மடங்கு அதிக வீரர் வீராங்கனைகளுடன் டோக்கியோ சென்றிருக்கும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.