இந்தியாவில் டேபிள் டென்னிஸ் - இதை கேட்டவுடன் பெரும்பாலோரின் நினைவிற்கு வரும் பெயர் – ஷரத் கமல்.


நான்கு காமென்வெல்த் தங்க பதக்கங்கள், இரண்டு ஆசிய விளையாட்டு பதக்கங்கள், மூன்று முறை ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி என இந்தியாவின் சிறந்த டேபிள் டென்னிஸ் வீரர்களுள் ஒருவராக அறியப்படுபவர் ஷரத் கமல். 


ஷரத் கமல் – சென்னையைச் சேர்ந்தவர். தேசிய அளவில் பல டேபிள் டென்னிஸ் சாம்பியன்களை உருவாக்கிய சென்னை நகரில் பிறந்து, தேசிய, சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஷரத் கமல் தடம் பதித்துள்ளார்.






டேபிள் டென்னிஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஷரத் கமலுக்கு, நான்கு வயது முதலே விளையாட்டு பயிற்சி ஆரம்பமானது. இதனால், டேபிள் டென்னிஸ் விளையாட்டை தனது ‘கரியராக’ மாற்றிக் கொண்டார் ஷரத்.  தொடர் பயிற்சியும், விடா முயற்சியும் ஈன்ற பயன், தேசிய அளவில் அசைக்க முடியாத சாம்பியனாக உயர்ந்தார். 9 முறை சீனியர் நேஷனல் சாம்பியனான அவர், இந்தியாவிலேயே இதற்கு முன்பு யாரும் செய்திடாத ரெக்கார்டை தன்வசப்படுத்தி கொண்டார்.


2006, 2010 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்த ஷரத் கமலுக்கு 2011-ஆம் ஆண்டு முதல் இறங்குமுகம்தான். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஷரத் கமலால் சோபிக்க முடியவில்லை.






ஆனால், அவரது விளையாட்டு திறமைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஷரத், 2018-ல் சிறப்பான கம்-பேக் கொடுத்தார். மீண்டும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்கள் அடித்தார்.






மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக டேபிள் டென்னிஸில் ஷரத்தின் ஆட்டம் ஆரம்பமானது. அவருடைய கம்-பேக்கிற்கு பிறகு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காக, 2019-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


2004, 2012, 2016 ஆண்டுகள் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்களை தொடர்ந்து இப்போது நான்காவது முறையாக ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் ஷரத் கமல், பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் தொடர், கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு ஒரு வழியாக இந்த ஜூலை மாதம் தொடங்க உள்ளது. உடல் அளவிலும், மனதளவிலும் ஒலிம்பிக் தொடருக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுள்ள ஷரத் கமல், பதக்க பெருங்கனை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்!