2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.


பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.






இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள், ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளனர். கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என முக்கிய ஆளுமைகள் பலரும் ஐந்து வீரர்களை பாராட்டி பதிவு செய்துள்ளனர். பொது மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.