Paris Olympic PV Sindhu: பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் தனிநபர் பிரிவில், இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியை தழுவினார்.
ஹாட்ரிக் பதக்க வாய்ப்பை இழந்த பிவி சிந்து:
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையிடம் வீழ்ந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனயை படைக்க சிந்து தவறினார். பேட்மிண்டன் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளனர். அதேநேரம், லக்ஷயா சென் மட்டும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன வீராங்கனையிடம் தோல்வி:
பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில், காலிறுதிக்கு முந்தை சுற்றில் உலக தரவரிசப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள சீனாவைச் சேர்ந்த சீனாவின் ஹீ பிங்கை, சிந்து எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் அடுத்தடுத்து செட்களை இழந்தார். இதன் மூலம், 21-19, 21-14 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். ஒலிம்பிக்கில் பங்கேற்று சிந்து பதக்கம் வெல்லாதது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, டோக்கியோவில் வெண்கலம் மற்றும் ரியோவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்யமாக, இந்த சந்திப்பு சிந்து மற்றும் ஹீ பிங் இடையேயான, டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் பிளே-ஆஃப் போட்டியின் மறுபோட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் வென்ற சிந்துவை வீழ்த்தி, இந்த முறை ஹீ பிங் பழிதீர்த்துள்ளார்.