Paris Paralympic 2024: பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024இல், ஜோடி கிரின்ஹாம் என்ற வில்வித்தை வீராங்கனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


கருவை சுமந்தபடி பதக்கம் வென்ற ஜோடி கிரின்ஹாம்:


பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி, 7 மாத கருவை சுமக்கும் பாரா தடகள வீராங்கனை பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஜோடி கிரின்ஹாம் என்பவர் தான் இந்த சாதனையை செய்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் சூழலில், இந்த தாய் ஒரு உண்மையான போராளி என்றும் பாராட்டி வருகின்றனர். ஜோடி கிரீன்ஹாம் வில்வித்தையில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.


வரலாறு படைத்த ஜோடி கிரின்ஹாம்: 


ஆகஸ்ட் 31 அன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில், கிரேட் பிரிட்டனின் ஃபோப் பேட்டர்சன் பென்னுக்கு எதிராக ஜோடி கிரீன்ஹாம் விளையாடினார். அதில் 142-141 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தோல்வியுற்ற ஃபோப் பேட்டர்சன் பைன், இந்த முறை தங்கப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூறத்தக்கது.


ஜோடி கிரீன்ஹாம் கர்ப்பமாக இருந்தபோது பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரா-தடகள வீராங்கனை ஆனார். அவர் சுமார் 28 வாரங்கள் அதாவது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரை இடம்பெற செய்துள்ளார்.






ஜோடி கிரின்ஹாமின் இடது கையில் ஊனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவள் வலது கையால் அம்பை எய்கிறார். அதுமட்டுமின்றி, செப்டம்பர் 02ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள கலப்பு அணி கூட்டு வில்வித்தையின் காலிறுதிப் போட்டிக்கும் அவர் முன்னேறியுள்ளார்.


தற்போது வரை இங்கிலாந்து 23 தங்கம் உட்பட மொத்தம், 43 பதக்கங்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மொத்தம் 72 பதக்கங்களுடன் முதலிடம் வகித்து வருகிறது.


ஜோடி கிரீன்ஹாம் நெகிழ்ச்சி:


வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு ஜோடி கிரீன்ஹாம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இலக்கை நிர்ணயிக்கும் போது குழந்தை வயிற்றில் உதைப்பதை நிறுத்தவில்லை. அம்மா என்ன செய்கிறாய் என்று குழந்தை கேட்பது போல் இருந்தது. ஆனால் என் வயிற்றில் இந்த ஆதரவு குமிழி ஒரு அழகான நினைவூட்டல். நான் என்னைப் பற்றி பெருமைப்படுகிறேன். நான் சிரமங்களை எதிர்கொண்டேன், அது எளிதானது அல்ல. நானும் குழந்தையும் நலமாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.