Paris Paralympics: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், பாரிஸ் பாராலிம்பிக்கில் குறைந்தபட்சம் வெள்ள்ப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


ஃபைனலில் தமிழக வீராங்கனை:


பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியர்கள் அபாரமான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிகாலை, மகளிருக்கான SU5 பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஷ் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பான போட்டியில் 23-21 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில், வெறும் நாற்பதே நிமிடங்களில் துளசிமதி முருகேசன் வெற்றி பெற்றார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததோடு, இந்தியாவிற்கான எட்டாவது பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார். மேலும், துளசிமதி முருகேசன் பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் அதேநேரம், அரையிறுதியில் தோல்வியுற்ற மனிஷா, அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களமிறங்க உள்ளார்.


யார் இந்த துளசிமதி முருகேசன்?


22 வயதான துளசிமத் முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். கடந்த 2022ம் ஆண்டு சீனாவின் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அதில் SL3-SU5 மற்றும் SU5 ஆகிய பிரிவுகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார்.


கடந்த டிசம்பரில் நடைபெற்ற 5வது ஃபஸ்ஸா துபாய் பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2023ல், மானசி ஜோஷி உடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் துளசிமதி தங்கப் பதக்கத்தை வென்றார். கலப்பு இரட்டையர் SL3 மற்றும் SU5 பிரிவில்,  நித்தேஷ் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். மானசியுடன் இணைந்து, உலக பாரா-பேட்மிண்டன் இரட்டையர் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஐதராபாத்தில் கோபிசந்த் மற்றும் இர்ஃபான் பயிற்சியாளர்களின் கீழ் துளசிமதி பயிற்சி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அவர், பாராலிம்பிக்கிலும் தனிநபர் பிரிவில் இறுதிப் போடிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.






யார் இந்த மனிஷா ராமதாஸ்? 


19வயதே ஆன மனிஷா ராமதாஸும் தமிழஜ்கத்தைச் சேர்ந்தவர் தான். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவிற்காக முதல்முறையாக சர்வதேச போட்டியில் களமிறங்கினார். அதே ஆண்டில் ஸ்பானிஷ் (நிலை 2) பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்றார். அந்த ஆண்டில் மட்டும் 11 தங்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம், 22 ஆகஸ்ட் 2022 அன்று SU5 பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆனார். இந்நிலையில், மனிஷா இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தாலும், இன்னும் வெண்கல பதக்கத்திற்கான வாய்ப்பில் நீடிக்கிறார்.